“விசாரணை முடிந்துவிட்டது.. ஊடகங்களை விரைவில் சந்திக்கிறேன்” – இயக்குனர் அமீர் பதிவு!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும், திமுக வில் அயலகப் பிரிவில் பொறுப்பில் இருந்தவருமான ஜாஃபர் சாதிக் மீது கடந்த பிப்ரவரி மாதம் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். அதன் பின்னர் அவர் ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரோடு தொடர்பு படுத்தி இயக்குனர் அமீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பான விளக்கம் அளிக்கும் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் அமீர், தனக்கும் ஜாஃபருக்குமான உறவு இயக்குனர், தயாரிப்பாளர் உறவுதான் என்றும், அதைத் தவிர அவரோடு தனக்கு எந்த உறவும் இல்லை என்றும் விளக்கமளித்தார்.
மேலும் இந்த வழக்கு குறித்து எப்போது எந்த தகவல் வேண்டுமானாலும் தான் தெரிவிக்க தயாராக இருப்பதாக அமீர் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு அலுவலகத்தில் ஆஜராக டெல்லி சென்றார். அங்கு அவரிடம் சில மணிநேரம் விசாரணை நடந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இயக்குனர் அமீர் தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் “அனைத்து ஊடக நண்பர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள். டெல்லியில் விசாரணை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறேன். இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு உங்களை சந்திக்கிறேன். அதுவரை யாரும் என்னை அழைக்க வேண்டாம். அன்புடன் அமீர்” எனக் கூறியுள்ளார்.