கேம்சேஞ்சர் படம் தோற்றது இதனால்தான்… தில் ராஜு சொன்ன காரணம்… ஏற்றுக்கொள்வாரா ஷங்கர்?
ஆர் ஆர் ஆர் படத்துக்குப் பிறகு ராம்சரண் நடிப்பில் உருவான கேம்சேஞ்சர் படத்தை ஷங்கர் இயக்க தில் ராஜூ தயாரித்து சங்கராந்தியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸ் செய்தனர். இந்த படத்துக்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்க, தமன் முதல் முதலாக ஷங்கர் படத்துக்கு இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார்.
படம் மிக அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி ரிலீஸானது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் கலவையான விமர்சனங்களால் வசூலில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் கேம்சேஞ்சர் லாபமீட்டும் படமாக அமையுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது. இதனால் தயாரிப்பு நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் ஏன் தோற்றது என்பது குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு பேசியுள்ளார். அதில் “கதைதான் காரணம். கதையை விட பட்ஜெட் மற்றும் பிரம்மாண்டத்தின் மீது கவனம் செலுத்தியதுதான் காரணம். நல்ல கதைகள் மற்றும் திறமையான இயக்குனர்களை வைத்து எங்கள் நிறுவனம் வெற்றிப் படங்கள் கொடுத்திருக்கிறது. உச்ச நட்சத்திரங்களோடு கூட்டணி அமைப்பது முக்கியமில்லை” எனக் கூறியுள்ளார்.