ரி ரிலீஸாகவுள்ள சேரனின் ‘ஆட்டோகிராஃப்’… AI மூலமாக உருவாக்கப்பட்ட புது டிரைலர்!
இயக்குனர் சேரன் இயக்கி நடித்த ஆட்டோகிராப் திரைப்படம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கியது. இந்த படம் எவ்வளவு பிரபலமானது என்றால் படத்தின் ஒரு பாடலில் கோபிகா அணியும் சேலையை ஆட்டோகிராப் சேலை என்று சொல்லி தமிழகத்தில் உள்ள ஜவுளிக்கடைகள் விற்கும் அளவுக்கு.
இந்த கதையில் நடிக்க பல ஹீரோக்களை தேடி சென்றார் சேரன். அதில் விஜய், பிரபுதேவா மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரும் அடக்கம். ஆனால் அதெல்லாம் சில காரணங்களால் நடக்காமல் போக தானே இயக்கி நடித்தார். அந்த படத்தை அவரே பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு தயாரித்தார். அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாவிட்டால், இரண்டு பாகங்களாக விஜய் டிவிக்கு விற்றுவிடலாம் என்ற யோசனையில் அதை எடுத்துவந்தார். அதற்காக சில காட்சிகளை நீளமாகவும் ஷூட் பண்ணினார் என்றெல்லாம் பல முறை படக்குழுவினர் பேசியுள்ளனர். ஆனால் படம் ரிலீஸாகி மெஹா ஹிட்டானது.
இந்நிலையில் இப்போது படம் ரிலீஸாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து படத்தின் புதிய டிரைலர் உருவாக்கப்பட்டு ரிலீஸாகியுள்ளது. இந்த டிரைலரின் சிறப்பம்சம் என்னவென்றால் அது முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதுதான். ஏப்ரல் அல்லது மே மாதம் இந்த படம் ரி ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது.