ஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி
பிக்பாஸ் 2 நிகழ்ச்சி நேற்று இரவு 7 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே ஓவியா இந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவுடன் விளம்பரம் செய்தது விஜய் டிவி. ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக வெளிவந்த செய்தியால் பார்வையாளர்களும் ஓவியா ஆர்மியினர்களும் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் ஒவ்வொரு போட்டியாளர் அறிமுகம் செய்து முடித்தவுடன் ஓவியா இந்த போட்டியில் கலந்து கொள்ள போவதாக விஜய் டிவி விளம்பரம் செய்தது. யாஷிகா ஆனந்த், மும்தாஜ், ஜனனி ஐயர் போன்ற ஒருசிலர் தவிர மற்ற போட்டியாளர்கள் எதிர்பார்த்த பரபரப்பை ஏற்படுத்தவில்லை. எனவே நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கியது. இருப்பினும் ஓவியாவின் வருகையை பார்க்க வேண்டும் என்று டிவி முன் பலர் தவமிருந்தனர்.
கடைசியாக 17வது நபராக சரியாக இரவு 11 மணிக்கு ஓவியா அழைக்கப்பட்டார். ஓவியா வந்தவுடன் பார்வையாளர்கள் முகத்தில் இருந்த உற்சாகத்தை கணக்கிடவே முடியாது. போட்டியை நடத்திய கமலுக்கு கிடைத்த வரவேற்பை விட அதிகமாக இருந்தது. ஆனால் ஓவியா இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர் இல்லை, ஒருசில நாட்களே தங்கும் விருந்தினர் என்று கமல் கூறியவுடன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி. இதற்காகவா நான்கு மணி நேரம் காத்திருந்தோம் என்று பலர் வெறுப்படைந்தனர். இருப்பினும் ஓவியாவின் பெயரை சொல்லி பார்வையாளர்களை நான்கு மணி நேரம் ஏமாற்றி விஜய்டிவி பார்க்க வைத்துவிட்டதாக பலர் குற்றம் கூறி வருகின்றனர்.