1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (13:31 IST)

திலீப் குற்றமற்றவர்? விரைவில் வெளியில் வரட்டும்: பாவனா பரபரப்பு அறிக்கை!

திலீப் குற்றமற்றவர்? விரைவில் வெளியில் வரட்டும்: பாவனா பரபரப்பு அறிக்கை!

நடிகர் திலீப் குற்றமற்றவர் என்றும் தவறாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறுகிறார். அவர் கூறுவதை போல உண்மையிலேயே குற்றமற்றவர் என்றால் விரைவில் அதனை நிரூபித்து வெளியே வரட்டும் என நடிகை பாவனா பேஸ்புக் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 
 
நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் அதிரடியாக கைது செய்யப்பட்டு போலீஸ் கஸ்டடியில் விசாரணையில் உள்ளார். இந்த வழக்கில் நடிகர் திலீப் குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தவாறே உள்ளன.
 
இந்நிலையில் இதில் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா, தனது சகோதரரின் பேஸ்புக் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொலைக்காட்சி மூலமாகவும், பேட்டி மூலமாகவும் பேசும் மனநிலையில் நான் தற்போது இல்லை. எனவேதான் இந்த அறிக்கையை இப்படி வெளியிடுகிறேன்.
 
எனக்கு நடந்த அந்த மறக்க முடியாத, துரதிருஷ்டவசமான கஷ்டத்தை கடந்து வந்து கொண்டு இருக்கிறேன். இந்த வழக்கு வழக்கு தொடர்பாக சமீபத்தில் நடந்த கைது நடவடிக்கைகள் அனைவரையும் போல எனக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
நான் யாரையும் சந்தேகப்படும் நபர் இல்லை. யார் மீதும் எனக்கு தனிப்பட்ட பகை கிடையாது. யாருடைய பெயரையும் நான் கூறவில்லை. அந்த நடிகருடன் சில படங்களில் நடித்துள்ளேன். கடந்த காலங்களில் தனிப்பட்ட முறையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் நட்பில் இருந்து இருவரும் பிரிந்துவிட்டோம்.
 
அந்த நடிகரின் கைது பற்றிய தகவல்களை ஊடகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்தபோது அவர் தவறு செய்ததற்கான போதிய ஆதாரங்கள் போலீசாரிடம் உள்ளதாக தெரியவந்தது.
 
தவறுதலாக குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நடிகர்(திலீப்) கூறுகிறார். அது உண்மையாக இருக்குமேயானால் அவர் எவ்வளவு விரைவில் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் நிரூபிக்கட்டும்.
 
அப்படி இல்லையென்றால் அவர் செய்த தவறான செயல்கள் பற்றிய தகவல்கள் வெளிவரட்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தான். குற்றம் செய்யாத ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. அதுபோல் எந்த ஒரு குற்றவாளியும் தப்பித்துவிடக்கூடாது என்றார்.