வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (10:13 IST)

அறிமுக நாயகன் ஜேடி நடிக்கும் 'பயமறியா பிரம்மை' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

69 எம்எம் ஃபிலிம் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் ராகுல் கபாலியின் இயக்கத்தில், அறிமுக நாயகன் ஜேடி, குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் தயாராகி இருக்கும் 'பயமறியா பிரம்மை' எனும் திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. 
 
இந்த சந்திப்பில் பாடலாசிரியர் வெரோனிகா, ஒளிப்பதிவாளர்கள் நந்தா &  பிரவீன், இசையமைப்பாளர் கே, நடிகர்கள் ஜாக் ராபின்சன், வினோத் சாகர், ஜேடி , குரு சோமசுந்தரம்,  நடிகை சாய் பிரியங்கா ரூத் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
இந் நிகழ்வில் நடிகர் ஜாக் ராபின்சன் பேசுகையில்.... 
 
இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லலாம். 2022 ஆம் ஆண்டில் இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இந்த படக் குழுவினருடன் பணியாற்றிய அனுபவம் வித்தியாசமாகவும், புதிதாகவும் இருந்தது. இயக்குநர் கதை சொல்லும் விதமே புதிதாக இருக்கும். அதை கேட்டு நடிக்கும்போது சற்று பதட்டமும் இருக்கும். இயக்குநரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப நம்மால் நடிக்க முடியுமா..! என தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. இதை கவனித்த இயக்குநர் உன்னால் முடியும் என உற்சாகப்படுத்தி நடிக்க வைத்தார். படப்பிடிப்பு தளத்தில் என்னை ஒரு சகோதரரை போல கொண்டாடினார்கள்.‌ 
 
இந்தப் படத்தில் நடித்திருக்கும் குரு சோமசுந்தரத்தை பார்த்து.. எப்படி இவரால் நடிக்க முடிகிறது என்று வியந்திருக்கிறேன். 'மின்னல் முரளி' படத்தில் இவருடைய நடிப்பை பார்த்து, நம்மால் இப்படி எல்லாம் நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட்டிருக்கிறேன். அவரைப் பார்த்து நடிக்க கற்றுக் கொண்டிருக்கிறேன் '' என்றார். 
 
நடிகர் விஸ்வாந்த் பேசுகையில்.....
 
கபாலி படம் பார்த்துவிட்டு இந்தப் படத்திற்காக முதன் முதலில் அழைத்தவர் இயக்குநர் ராகுல் கபாலி. தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். அவருடைய அலுவலகத்திற்கு சென்றேன். அவர் அடிப்படையில் ஒரு சர்வதேச அளவிலான ஓவியக் கலைஞர்.  அவருடைய அலுவலகம் முழுவதும் ஓவியங்களால் வண்ணமயமாக நிறைந்திருந்தது. படத்தின் திரைக்கதையை வாசிக்க கொடுத்தார்கள். வாசிக்கும்போதே இது ஒரு வழக்கமான தமிழ் படம் அல்ல என்பது தெரிந்தது. வாசித்து முடித்தவுடன் சின்னதாக டெஸ்ட் ஷூட் எடுத்தார்கள்.‌ அதை நான் இயல்பாக செய்தேன். உடனே இயக்குநர் ராகுல் கபாலி.. கபாலி படத்தில் உங்களது நடிப்பை பார்த்து தான் உங்களுக்கு அழைப்பு விடுத்தேன். அந்தப் படத்தில் தலைவருடன் கலகலப்பாக  நடித்திருப்பீர்கள். அதேபோன்றதொரு நடிப்பு இந்த கதாபாத்திரத்திற்கும் அவசியமாக தேவைப்படுகிறது என்றார்.  
 
இந்தப் படத்தில் ஜெகதீஷ் என்ற முதன்மையான கதாபாத்திரத்துடன் என்னுடைய கதாபாத்திரம் இணைந்து பயணிக்கிறது. ஜெகதீஷ் கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார்கள்? என கேட்டேன். அவர் ஒரு திறமையான நடிகர் என சொன்னார்.  படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான்.. அந்த திறமையான நடிகர் குரு சோமசுந்தரம் என தெரிய வந்தது. அவரைப் போன்ற ஒரு நடிப்பு ஜாம்பவானுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். 
 
நான் பெரும்பாலும் நடிக்கும் காட்சிகளை முதல் அல்லது இரண்டாவது டேக்கில் ஓகே செய்து விடுவேன். இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரியில் அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.‌ முதல் ஷாட்டில் நடிக்கும்போது  ஐந்தரை நிமிடத்திற்கு பிறகு இயக்குநர் கட் சொன்னார்.  அதன் பிறகு இந்த ஷாட் ஓகே என்று நினைத்தேன். குரு சோமசுந்தரம் மீண்டும் அந்த காட்சியை படமாக்கலாம் என்றார். அடுத்த டேக் ஆறரை நிமிடம் வரை சென்றது.‌ அதுவும் திருப்தி இல்லை. மீண்டும் அடுத்த டேக்.. இந்த முறை எட்டு நிமிடம் வரை சென்றது. திருப்தியில்லை. அடுத்த டேக்கும் ஒன்பதரை நிமிடம் வரை நீடித்தது. அதிலும் திருப்தியில்லை.‌  அதன் பிறகு அன்று மாலையில் தொடர்ச்சியாக பதினைந்து நிமிடம் வரை அந்த டேக் சென்றது. அதுதான் இயக்குநருக்கு திருப்தி அளித்தது.  சிங்கிள் டேக்கில் நானும் குரு சோமசுந்தரமும் நடித்திருக்கிறோம். இதற்காக இயக்குநருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  அந்த அளவிற்கு காட்சிகளை தெளிவாக திட்டமிட்டு இயக்குநர் உருவாக்கி இருக்கிறார். இதனை நீங்கள் திரையில் பார்க்கும்போது தமிழ் சினிமாவில் இதுவரை மேற்கொள்ளப்படாத புதிய முயற்சியாக இருக்கும். சர்வதேச தரத்திலான இந்த முயற்சியை படக்குழுவினர் மேற்கொண்டு இருக்கிறார்கள்.‌ 
 
இயக்குநர் ராகுல் கபாலியை பற்றி ஒரு சுவாரசியமான விசயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இதுவரை பதினேழு நாடுகளுக்கு டூவீலரில் பயணித்திருக்கிறார்.‌ உலகம் முழுவதும் சுற்றி கிடைத்த அனுபவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். ஓவியத்தைப் போல நேர்த்தியாக உருவாக்கி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். '' என்றார். 
 
நடிகை சாய் பிரியங்கா ரூத் பேசுகையில்.....
 
ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் 'பயமறியா பிரம்மை' எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம்.  இந்தப் படத்தின் கதையைப் பற்றியும் கதாபாத்திரத்தை பற்றியும் முதல் நாள் விரிவாக விவரித்தார்கள். அடுத்த நாள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடித்துவிட்டு வந்து விட்டேன். ஆனால் பட குழுவினர் அனைவரும் பெருந்தன்மையுடன் பழகினர்.  இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். '' என்றார். 
 
நடிகர் வினோத் சாகர் பேசுகையில்....
 
பயமறியா பிரம்மை படத்தைப் பொறுத்தவரை நான் திடீர் மாப்பிள்ளை.‌ ஒரு நாள் இரவு பதினோரு மணி அளவில் 'ராட்சசன்' படத்தில் பணியாற்றய கீர்த்தி வாசன் எனும் நண்பர் போன் செய்து, இயக்குநர் ராகுல் கபாலி உன்னிடம் பேச வேண்டும் எனச் சொன்னார். இயக்குநர் ராகுல் கபாலி பேசிவிட்டு, நாளை காலையில் படப்பிடிப்பு. படப்பிடிப்பு தளத்திற்கு நேராக வந்து விடுங்கள் என்றார். நானும் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று இயக்குநரை சந்தித்து அவர் அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். 
 
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள்.  திறமையான தொழில்நுட்ப குழுவினர் இதில் பணியாற்றியிருக்கிறார்கள். நீளமான காட்சிகள் அதிகம் இருக்கிறது. இதில் நடிகர்கள் பயிற்சி பெற்று நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் என்றார்.
 
நாயகன் ஜேடி பேசுகையில்....
 
இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு செல்வதற்கு முன் ஓராண்டாக இதற்கான முன் தயாரிப்புகளில் நானும், இயக்குநர் ராகுலும் ஈடுபட்டோம். அதற்கு முன்னதாக ஒரு குறும்படத்தை உருவாக்கினோம். அதுவும் பரிசோதனை முயற்சி தான். அதில் தான் நானும், ராகுலும் அறிமுகமாகி நண்பர்களானோம். அதன் பிறகு கதைகளைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினோம். அதன் பிறகு 'பயமறியா பிரம்மை' படத்தை பற்றி பேசி பேசி இன்று படத்தை நிறைவு செய்து இருக்கிறோம். படத்தை விரைவில் வெளியிடுகிறோம். ஊடகம் மற்றும் பார்வையாளர்களின் ஆதரவையும் வரவேற்பையும் பொறுத்துதான் எங்களது அடுத்த கட்ட முயற்சி இருக்கும்.  நன்றி என்றார். 
 
இயக்குநர் ராகுல் கபாலி பேசுகையில்.... 
 
இது என்னுடைய முதல் படம். இந்தக் கதையைத்தான் படமாக்க வேண்டும் .. இப்படித்தான் படமாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையுடனும் செயல்பட்டதில்லை.  குழுவாக இணைந்து எங்களால் என்ன செய்ய முடியும் என்பதனை சிந்தித்து..‌ எங்களுடைய தகுதியும், திறமையும் என்ன என்பதனையும் யோசித்து.. ஒரு கதைக்குள் எங்களால் என்னென்ன செய்ய முடியும் என நினைத்து தான் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம்.  அதனால் இந்த படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த குழுவினருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படக்குழுவினர் அனைவரையும் உணர்வு ரீதியாக பெரிய அளவில் தொல்லைக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் அனைவரும் ஆர்வத்துடன் பணியாற்றினார்கள். 
 
இந்தத் திரைப்படம் இனிமையான சுவாரசியமான அனுபவத்தை உங்களுக்கு தரும்.  வெளியாகும் படங்களில் இந்த திரைப்படம்.. எங்களின் புதிய முயற்சியை உங்களுக்கு உணர்த்தும். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து, பிடித்திருந்தால்... ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.