கரண்டு கம்பியை கையில் பிடித்த அதர்வா


Suresh| Last Modified ஞாயிறு, 3 ஜனவரி 2016 (16:36 IST)
ம்... மெதுவா... அதர்வா கரண்டை பிடிச்சாரா? என்னாச்சு? என்று பதட்டத்துடன் வந்தவர்கள் முதலில் மூச்சு வாங்கிக் கொள்ளுங்கள்.

 

 
அதர்வா செய்திருப்பது கரண்டைவிட ஆபத்தானது.
 
மின்சாரம் தாக்கினால் அந்த ஆள் மட்டும்தான் காலி. படம் தயாரித்து தோல்வியடைந்தால் பரம்பரையே காலி.
 
அப்படியொரு சூதாட்டமாகிவிட்டது தமிழ் சினிமா தயாரிப்பு. இப்படியொரு இக்கட்டில் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் அதர்வா. 
 
அது பற்றி அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
"சில வருடங்களுக்கு முன்பு பாணா காத்தாடியின் மூலம் உங்களுக்கு அறிமுகமானேன்.
 
எனது திரையுலக பயணத்தில் ஏற்பட்ட வெவ்வேறு அனுபவங்கள் என்னை இன்று ஒரு பண்பட்ட நடிகனாக உங்கள் முன் நிறுத்தி இருக்கிறது. மேலும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை ஏற்றுக் கொண்டு அன்புகாட்ட வைத்திருக்கிறது.
 
உங்கள் அனைவரின் அன்பால் ‘ஈட்டி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததோடு, கடின உழைப்பு பெரும் வெற்றி தரும் என்ற விஷயத்தையும் எனக்குப் புரிய வைத்திருக்கிறது.
 
இந்த அற்புதமான தருணத்தில், ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்ட நீங்கள் ஒரு தயாரிப்பாளராகவும் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
 
எங்களது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் ‘கிக்காஸ் என்டர்டெயின்மெண்ட்’ இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பை பத்ரி வெங்கடேஷ் இயக்க இருக்கிறார். இவர் ‘பாணா காத்தாடி’ திரைப்பட மூலம் இயக்குனராக அறிமுகமான என் இனிய நண்பர்.
 
இந்த திரைப்படத்தில் எங்களால் இயன்ற அளவு தமிழ்த்திரையுலகத்தின் சிறந்த கலைஞர்களை ஒருங்கிணைத்திருக்கிறோம். நாங்கள் காணும் கனவு நனவாவது ரசிகர்களாகிய உங்கள் கைகளிலேயே இருக்கிறது.
 
திரைப்படத்தின் பெயர், நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் முதலிய அனைத்து விவரங்களையும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.
 
எங்களது படைப்பு நிச்சயம் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆதரவளிக்க அன்போடு வேண்டுகிறேன்.
 
எங்கள் திரைப்படக்குழுவின் சார்பாக இப்புத்தாண்டு அனைவருக்கும் எப்போதும் அன்பையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் தர அன்போடு வாழ்த்துகிறோம்" - என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :