கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவான தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது. படம் திரையரங்குகள் மூலமாக மட்டும் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இதில் பல நடிகர்களின் கேமியோக்களை ஆங்காங்கே வைத்திருந்தார் வெங்கட்பிரபு. இதில் உச்சபட்சமாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏ ஐ மூலமாக திரும்பக் கொண்டுவரப்பட்டது, தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இனிய சர்ப்ரைஸாக அமைந்தது. படம் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள், நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்த்து மகிழ்ந்தார்கள்.
இந்நிலையில் படம் குறித்துத் தற்போது பேசியுள்ள தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி “கோட் படத்தின் தியேட்டர் வசூல் மட்டும்தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த படத்தில் திரையரங்கு அல்லாத மற்ற வியாபாரங்களின் மூலமே எங்கள் நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைத்தது. விஜய் போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுக்கும்போது ரிலீஸுக்கு முன்பே லாபம் கிடைத்துவிடும்” என சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.