வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : வியாழன், 6 ஜூன் 2024 (15:18 IST)

அஞ்சாமை என டைட்டில் வைத்துவிட்டு பயந்தால் எப்படி ?” ; இயக்குநர் சுப்புராமனின் தில்லான பேச்சு

தரமான படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த வருடம் ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வை சொன்னது.. அந்தவகையில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சாமை’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. 
 
விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர்கள் மோகன் ராஜா, லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். 
 
ஜூன்-7ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி தனது முதல் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுப்புராமன். படம் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறதா ? இல்லை எதிர்க்கிறதா ? படம் வெளியானால் சர்ச்சையை கிளப்புமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சுப்புராமன்.  
 
‘அஞ்சாமை’ படம் குறித்து இயக்குநர் சுப்புராமன் கூறும்போது....
 
“நீட் விஷயம் பற்றி பேசியிருப்பதால் பல பேர் விமர்சிப்பார்கள் என்றாலும் அவர்களைப் பார்த்து நான் எதற்கு பயப்பட வேண்டும். நான் உண்மையை பேசி இருக்கிறேன். உண்மையை பேசினால் யாருக்கு வலிக்கும் ? தப்பு பண்ணியவர்கள் தான் பயப்பட வேண்டும். இதைவிட பெரிய எதிர்ப்புகள் வந்தாலும் அதை பற்றி கவலை இல்லை. அஞ்சாமை என டைட்டில் வைத்துவிட்டு பயந்தால் எப்படி ? இந்த படத்தின் கதையை எழுதும்போதும், படத்தை எடுக்கும்போதும் எனக்கு எந்த பயமும் இல்லை.. படம் முடிந்த பிறகு நிறைய பேர் பயமுறுத்தினார்கள். ஆனால் நாங்கள் சரியாக இருந்ததால் சென்சாரில் எந்த பிரச்சனையும் எழவில்லை.
 
இந்த படத்தின் கதை மக்களிடம் சென்று சேருமா, சேராதா என்பது நம் கையில் இல்லை. மெனக்கெட்டு தான் இதன் திரைக்கதையை எழுதியுள்ளோம். காரணம் மக்களுக்கு இந்த படத்தின் மூலம் கருத்து சொல்லவில்லை. என்ன நிலைமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், கொஞ்சம் திரும்பி பாருங்கள் என்று சொல்வது போலத்தான் உருவாக்கியிருக்கிறோம்.
 
இந்த கதையை விதார்த், வாணி போஜன் ஆகியோரை மனதில் வைத்து எழுதவில்லை. அந்த கதாபாத்திரங்களுக்கே உரிய உணர்வுடன் இந்த கதையை எழுதி விட்டு அதற்கு பொருத்தமானவர்களை தேடிய போது இவர்கள் இருவரும் சரியான தேர்வாக இருந்தார்கள்.  
 
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வலி நிறைந்ததாக இருக்கும். நான் கதை சொல்லும்போது யாராவது அழுதால் அதை பார்த்து நான் சிரித்து விடுவேன். இதற்கெல்லாம் அழுகிறார்களே என்று. ஆனால் மற்றவர்களுக்கு நான் கதை சொல்லும்போது எனக்கே அது பலமுறை நடந்தது. படப்பிடிப்பில் கூட விதார்த்தை வைத்து காட்சிகளை படமாக்கும்போது அவருடைய கதாபாத்திரத்திற்குள் நானும் சென்று விடுவேன். உடனடியாக அடுத்த ரகுமான் சாரை வைத்து காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு சிரமமாக இருக்கும்.
 
பெரிய ரேஸில் ஓடுகிறவர்கள் ஓடட்டும், நான் தோட்டத்துக்குள்ளேயே ஒரு ஓரமாக ஓடிக்கொள்கிறேன் என விதார்த் சொல்வது அவரது தன்னடக்கம். ஆனால் அங்கே ஓடுகிறவர்களால் இங்கே ஓட முடியாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. அந்த அளவிற்கு இந்த படத்தில் வித்தியாசமாக, ஆழமாக நடித்துள்ளார் விதார்த்.  ஒரு குணச்சித்திர கதாபாத்திரம் மாதிரி பண்ணுவதற்கு இங்கே ஆளில்லை, நீங்கள் பாலிவுட் லெவலில் போக வேண்டியவர் என விதார்த்திடம் நானே கூறி இருக்கிறேன். ஆஞ்சநேயருக்கு அவரது பலம் தெரியாது என்று சொல்வார்கள். அதுபோல தான் விதார்த்திற்கும் அவரது பலம் தெரியவில்லை” என்று கூறினார்.