1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: புதன், 5 ஜூன் 2024 (17:14 IST)

ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் ?” ; வாணி போஜன் கொண்டு வரப்போகும் முதல் திட்டம்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கதாநாயகியாக சாதித்தவர்கள் வெகு சிலரே.. அதில் குறிப்பிடத்தக்கவர் நடிகை வாணி போஜன். 
 
அதேசமயம் வழக்கமான ‘டிபிக்கல்’ கதாநாயகியாக வந்து செல்வதை விட அழுத்தமான கதைகளுக்கும் நடிப்புத்திறமையை வெளிப்படுத்த உதவும் கதாபாத்திரங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து படங்களை தேர்வு செய்கிறார் வாணி போஜன். 
 
கடந்த வருடம் வெளியான செங்களம் வெப்சீரிஸில் எதிர்மறை சாயல் கொண்ட அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்து, இவருக்குள் இப்படி ஒரு நடிப்புத்திறமை ஒளிந்துள்ளதா என ரசிகர்களை வியக்க வைத்தார் வாணி போஜன். 
அடுத்ததாக, வரும் ஜூன்-7ஆம் தேதி வெளியாக இருக்கும் ‘அஞ்சாமை’ படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக, அதிலும் நீட் தேர்வு எழுத தயாராகும் மாணவனுக்கு அம்மாவாக நடித்து தனது நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியுள்ளார் வாணி போஜன்.
 
இதில் அவரது கணவராக கதாநயகனாக நடிகர் விதார்த் நடித்துள்ளார்.
 
அறிமுக இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ள இந்தப்படத்தை  திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். நல்ல படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களுக்கு தந்து வரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப்படத்தை உலகமெங்கும் வெளியிடுகிறது.
 
இந்தப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை வாணி போஜன் தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார். 
 
“இயக்குநர் சுப்புராமன் முதலில் இந்த படத்தின் கதையை கூறியபோது.. சின்ன பசங்களுக்கு அம்மாவாக தான் நடிக்கிறீர்கள் என்று தான் சொன்னார். ஆனால் அதன்பிறகு எனது மகனாக நடித்துள்ள கிருத்திக் வந்து நின்றபோது பார்த்தால் என்னை விட பெரியவனாக இருந்தார். ஆனால் கதை கேட்கும்போது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. அதேசமயம் இடைவேளை வரை கதை சொன்ன இயக்குநர் மீதிக்கதையை என்னிடம் சொல்லவே இல்லை. நான் எவ்வளவு வற்புறுத்தியும் படப்பிடிப்பில் பார்த்துக் கொள்ளலாம், வாங்க மேடம் என்று சொல்லியே சமாளித்து விட்டார். அப்படியும் விடாமல் கேட்டபோது இடைவேளைக்குப் பிறகு கதை எப்படி போகும் என நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார். அதனால் இடைவேளைக்குப் பிறகு கதை என்னவாக இருக்கும் என என்னுடைய ஆர்வம் இன்னும் அதிகமாகி விட்டது.
 
அந்த வகையில் அம்மாவாக நடிக்கிறேனா, பாட்டியாக நடிக்கிறேனா என்பதையெல்லாம் ஒதுக்கிவிட்டு கதை மீது இருந்த ஒரே ஒரு நம்பிக்கையில் தான் இந்த படத்தை ஒப்புக் கொண்டேன். அதுமட்டுமல்ல இந்த படத்தில் விதார்த் நடிக்கிறார் என்று தெரிய வந்ததுமே நிச்சயமாக அவர் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பவர் என்பதால் இன்னும் எனக்கு நம்பிக்கை அதிகமானது. 
 
இந்தப் படத்தின் கதை நீட் தேர்வை மையப்படுத்தியது. இதற்கு முன்பு நான் நடித்த செங்களம் வெப்சீரிஸ் முழுக்க முழுக்க அரசியலை பேசியது. அதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இந்தப் படமும் தற்போது அரசியலில் தொடர்ந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தி வரும் விஷயத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இது போன்ற கதைகள் எனக்கு அமைவதை பார்க்கும் போது, என்னுடைய ராசியே அப்படித்தானோ என்று நினைக்கிறேன். அரசியலுக்கு வருவதில் எனக்கு பெரிய ஆர்வமில்லை. அதே சமயம் பெண்கள் அரசியலுக்கு வந்தால் மட்டும் அதை ஏன் பெரிய விஷயமாக பேசுகிறார்கள் ?. செங்களம் வெப்சீரிஸ் வெளியான சமயத்தில் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டதுபோது, ஆமாம் என்று கூறினேன். ஆனால் என் அப்பா என்னிடம் எதற்காக ஆமாம் என்று பதில் சொன்னாய் என்று பதறிப் போய்விட்டார். இதையே ஒரு ஆண் சொன்னால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு பெண் இப்படி சொன்னால் மட்டும் ஏன் அரசியலுக்கு வரணும் என கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதுவே என்னை பல இடங்களில் ஆமாம் என்று சொல்வதற்காக தூண்டுகிறது.
 
நல்லது பண்ண வேண்டும் நினைக்கும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் இலவச கல்வியை தான் முதலில் கொண்டு வருவேன்.
 
உண்மை சம்பவத்தை மையப்படுத்திய படமாக உருவாகி இருப்பதால் இதில் நடிக்கும் போது அதன் தாக்கம் எங்களிடம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக ஒரு காட்சியில் நடித்தபோது அடுத்த ஷாட்டிற்காக விதார்த்தை தேடியபோது அவரை காணவில்லை. அதன் பின்னர் தான் அவர் பாத்ரூமில் சென்று அழுது கொண்டிருந்தார் என்று தெரிய வந்தது. அந்த அளவிற்கு காட்சிகள் அந்த கதாபாத்திரத்தை பாதிக்கிறது. ஒரு காட்சியில் என்னுடைய மகனாக நடித்த சிறுவனை அடிக்க வேண்டி இருந்தது. இயக்குநர் நிஜமாகவே அடியுங்கள் என்று கூறினார். 
 
ஆனால் அந்தப் பையனின் அம்மா சற்று தள்ளி நின்று இதை பார்த்து பதறிப் போய்விட்டார். அதனால் நான் குச்சியை வைத்து மெதுவாக தான் அடித்தேன். ஆனால் அந்தப் பையனோ, அக்கா வலித்தாலும் பரவாயில்லை.. நல்லா அடிங்க அக்கா... என்று கூறினான். உடன் நடிக்கும் மற்றவர்கள் நடிப்பதை பார்க்கும்போது குழந்தைகளாக இருந்தாலும் கூட நாமும் ரியலாக நடிக்க வேண்டும் என அவர்களுக்கும் ஒரு ஆர்வம், ஒரு ஆரோக்கியமான போட்டி வந்து விடுகிறது.
 
அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதால் இமேஜ் பாதிக்குமோ என்கிற யோசனை எதுவுமே எனக்கு வரவில்லை. என்னை பொருத்தவரை ஒரு படத்தில் நான் நடிக்கிறேன் என்றால் அந்த படம் வெளியான பிறகு, இதற்கப்புறம் வாணி எந்த மாதிரி நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள் இல்லையா ? அதை நான் ரொம்பவே விரும்புகிறேன்.. ஒரு நடிகராக என்னை நிரூபிக்கும் படங்களையே நான் விரும்பி தேர்வு செய்கிறேன். அப்படி ஒரு படம் தான் இந்த ‘அஞ்சாமை’ என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறினார்.