நடிகர் அஜித் டீமுக்கு அப்துல்கலாம் விருது!
நடிகர் அஜித் உறுப்பினராக உள்ள 'தக்ஷா' குழுவுக்கு தமிழக அரசின் அப்துல்கலாம் விருது வழங்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் ஹெலிகாப்டர் ஓட்டுவது, ஆள் இல்லா குட்டி விமானங்களை இயக்குவது ஆகியவற்றில் கற்றுத் தேர்ந்தவர்.
சென்னை எம்ஐடி தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு 'தக்ஷா' என்ற பெயரில் இயங்குகிறது. இந்த குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அவ்வப்போது எம்ஐடி சென்று மாணவர்களுடன் குட்டி விமானங்களை தயாரிப்பதில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். மேலும் அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் எம்ஐடி மாணவர்கள் தயாரித்த ஆள் இல்லா விமானம் குரங்கனி தீ விபத்து, திருவண்ணாமலை கிரிவல பாதை தீ விபத்து ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது. வட மாநிலங்களிலும் வெள்ள சேதம், விபத்துகள் நேரத்தில் உதவி இருக்கிறது.
அடுத்து மருத்துவ சேவைக்காக எம்ஐடி மாணவர்களின் ஆள் இல்லா விமானம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதன்மூலம் மருத்துவ சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளை குறைந்த நேரத்தில் கொண்டு செல்ல முடியும்.
இந்த சிறப்பான சேவைக்காக நடிகர் அஜித் உறுப்பினராக உள்ள 'தக்ஷா' குழுவுக்கு தமிழக அரசின் 'அப்துல்கலாம்' விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 72-வது சுதந்திர தின விழாவையொட்டி தமிழக அரசின் சார்பில் முதல்வர் பழனிசாமி இந்த விருதை எம்ஐடி தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் குழு 'தக்ஷா'வுக்கு வழங்கினார்.