தொண்டை கிழிய பாட்டு பாடும் ஆதிக் ரவிச்சந்திரன்.. ‘குட் பேட் அக்லி’ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்..!
அஜித் கதாநாயகனாக நடித்த "குட் பேட் அக்லி" திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ஆம் தேதி உலகமெங்கும் சிறப்பாக வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் சிங்கிள் பாடல் நாளை மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடலின் ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியாகி, இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
27 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த ப்ரோமோவில், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தொண்டை கிழிய பாடலை பாடும் காட்சிகள் ப்ரோமோ வீடியோவில் இடம் பெற்றுள்ளன. விஷ்ணு எடாவன் எழுதிய இந்த பாடல், ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் பேசப்படும் வகையில் உள்ளது.
கணிசமான ஆற்றலுடன் பாடப்பட்ட இந்த சிறிய வீடியோவையே பார்க்க ரசிகர்கள் பரவசமடைந்துள்ள நிலையில், முழு பாடலுக்கு மேலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், ராகுல் தேவ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவிலும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பிலும் பணியாற்ற, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.