ரேஸ் பயிறிசியின் போது அஜித் சென்ற கார் விபத்து…! உடல்நிலை குறித்து மேலாளர் வெளியிட்ட தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை முடித்த பின்னர் அவர் சில மாதங்கள் சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு கார் ரேஸ் போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை அஜித் உருவாக்கியுள்ளார். இந்த அணியின் மற்ற உறுப்பினர்கள் யார் என்பது குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராகவும், முதன்மை ஓட்டுனராகவும் அஜித் செயல்பட, ஃபேபியன் ட்யூபிக்ஸ், மேத்யூ டெய்ட்ரி மற்றும் கேம் மெக்லார்ட் ஆகியோர் மற்ற உறுப்பினர்களாக இணைந்துள்ளனர்.
இந்நிலையில் துபாயில் ரேஸுக்கான பயிற்சியில் அஜித் ஈடுபட்ட போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. ஆனால் அவர் பாதுகாப்பு உடைகள் மற்றும் தலைக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்கு எந்த காயமும் இல்லாமல் நலமுடன் உள்ளதாக அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இன்று முதல் அவர் மீண்டும் பயிற்சியை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.