1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (07:42 IST)

இயக்குனர் ராசு மதுரவன் குடும்பத்துக்கு உதவி செய்த ஏ ஆர் முருகதாஸ்!

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரித்த பூமகள் ஊர்வலம் ராசு மதுரவனின் முதல் படம். பிரசாந்த், ரம்பா நடித்திருந்த அந்தப் படத்தை முப்பதுக்கும் குறைவான நாட்களில் அவர் எடுத்ததால் சூப்பர்குட் பிலிம்ஸே அவருக்கு அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. துரதிர்ஷ்டவசமாக இரண்டாவது படம் ஆரம்பத்திலேயே கைவிடப்பட்டது.

அதன் பிறகு மாயாண்டி குடும்பத்தார் என்ற படத்தின் மூலமாக அவர் கவனம் பெற்றார். அந்த படத்தில் 10 இயக்குனர்களை 10 முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். அந்த படம் உணர்வுப்பூர்வமாக பலரையும் கனெக்ட் செய்த ஒரு படமாக அமைந்தது. இப்போதும் தொலைக்காட்சியில் அந்த படத்துக்கு நல்ல வரவேற்பு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து மதுரையைக் கதைகளமாகக் கொண்ட படங்களாக அவர் இயக்கி வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் இப்போது அவரது குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளனர். அவரது மகள்களின் பள்ளி கட்டணத்தைக் கூட கட்ட முடியாத நிலையில் இருக்க, அதையறிந்த சிவகார்த்திகேயன் அவர்கள் இருவருக்கும் பள்ளிக் கட்டணமாக 97000 ரூபாய் செலுத்தினார். இது சம்மந்தமான செய்திகள் ஊடகத்தில் வெளியாகி கவனம் பெற்றன.

இதையடுத்து இப்போது ஏ ஆர் முருகதாஸும் ராசு மதுரவன் குடும்பத்துக்கு பண உதவி செய்துள்ளார். இயக்குனர் சங்கம் மூலமாக அவர்கள் குடும்பத்துக்கு 1 லட்ச ரூபாய் பண உதவி செய்துள்ளார்.