வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2024 (12:46 IST)

எவ்வளவு பணம் கொடுத்தாலும் திருமண நிகழ்ச்சிகளில் ஆடமாட்டேன் – பாலிவுட் நடிகர்களைத் தாக்கிய கங்கனா!

பாலிவுட்டின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். சக பாலிவுட் கலைஞர்கள் பலரையும் பற்றி கடும் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். இதனால் பல முன்னணிக் கலைஞர்கள் இவரோடு இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை. ஆனால் ஆளும் பாஜக அரசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து வருகின்றார் கங்கனா.

இந்நிலையில் சமீபத்தைய அவரது பதிவு ஒன்று பாலிவுட் நடிகர்களை மறைமுகமாக சாடியுள்ளது. சமீபத்தில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ப்ரி வெட்டிங் நிகழ்ச்சியில் பாலிவுட் முன்னணி நடிகர்கள் கலந்துகொண்டு நடனமாடினார். இது அவர்கள் மீது விமர்சனங்களை எழ வழிவகுத்தது.

இந்நிலையில் கங்கனாவின் பதிவில் “நான் எவ்வளவோ பொருளாதார சிக்கல்களில் மாட்டியுள்ளேன். ஆனாலும் பாலிவுட்டில் நானும் லதா மங்கேஷ்கர் அவர்களும் மட்டும்தான் எந்த திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாட்டு பாடுவதோ நடனமாடுவதோ இல்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறோம். எத்தனையோ முறை எனக்கு ஆசைகாட்டப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளிலும் விருது நிகழ்ச்சிகளிலும் நடனமாட மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளேன். பணம் வேண்டாம் என்று சொல்வதற்கு குணம் தேவை. பணத்தை நல்ல முறையில் உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்கிறேன்” எனக் கூறியுள்ளார். கங்கனாவின் இந்த பதிவு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.