திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Updated : செவ்வாய், 28 மே 2024 (14:09 IST)

அமெரிக்காவில் தெருக்கூத்து கலையை பிரமாண்டமாக நடத்தி கின்னஸ் சாதனை படைத்த இயக்குநர் சங்ககிரி ராச்குமார்!

கடந்த சில வருடங்களுக்கு முன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றது. இயக்குநர் சங்ககிரி ராச்குமார் இயக்கிய இப்படத்தில் தெருக்கூத்து கலை பிரதான இடம் பிடித்திருந்தது. பாரம்பரிய தெருக்கூத்து குடும்பத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் என்பதால், தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை இதில் அழுத்தமாக சொல்லி இருந்தார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார். மேலும் அதனை மெருகேற்றி முதன்முதலாக கம்போடியா அங்கோவார்ட் கோயில் முன்பாக நிகழ்த்தி அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது
 
இருப்பினும் கோவில் திருவிழாக்களில் மட்டுமே நடத்தப்படுகிற கலையாக  இல்லாமல் இன்னும் பெரிய  அளவில் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் இந்த கலை சென்று சேரவேண்டும் என
தமிழ்நாடு அறக்கட்டளையின் ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் ஒரு பிரம்மாண்டமான தெருக்கூத்தை நடத்தி உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்ட இயக்குநர் சங்ககிரி ராச்குமார் அதை சாதித்து இருக்கிறார்.
 
கடந்த மே 25ஆம் தேதி அமெரிக்காவின் முதன்மையான 10 தியேட்டர்களில் ஒன்றான சிக்காகோ ரோஸ்மான் தியேட்டரில் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமான தெருக்கூத்தை நடிகர் நெப்போலியன் தலைமையில் நடத்தி உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருப்பதுடன் உலக சாதனை பட்டியலில் சேர்ந்து கின்னஸ் புத்தகத்திலும் இந்த நிகழ்வை இடம்பெற செய்து சாதித்திருக்கிறார் சங்ககிரி ராச்குமார்.
 
இது குறித்து சங்ககிரி ராச்குமார் கூறும்போது,
 
 “தெருக்கூத்து கலையை மேம்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் சிகாகோ மாநகரில் ஏறக்குறைய 300 அமெரிக்காவில்  வசிக்கும் தமிழர்களுக்கு  தெருக்கூத்து கலையை பயிற்றுவித்து அவர்களை வைத்து அந்த பிரம்மாண்ட தெருக்கூத்தை நடத்தி உலக மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டேன். 
 
வீரா வேணுகோபால், சிவா மூப்பனார் உள்ளிட்ட தமிழ்நாடு அறக்கட்டளை நிர்வாகிகளின் பேராதரவோடு, ராஜேந்திரன் கங்காதரன், அன்பு மதன்குமார், பிரதீப் மோகன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இங்கே அமெரிக்காவில் வாழும் தெருகூத்தில்  ஆர்வமுள்ள தமிழர்களில் ஆடிசன் மூலம் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து ஒன்று சேர்த்து பயிற்சி அளிக்கப்பட்டது.
 
கொடை தன்மையை போற்றும் விதமாக வள்ளல் அதியமானின் கதையை தெருக்கூத்து வடிவில் எழுதி காட்சிகளை அமைத்தேன். தெருக்கூத்து கலையின் மகிமையை அங்கு வாழும் தமிழர்கள் உணர உணர எதிர்பாராத அளவிற்கு ஆர்வமாக வந்து கலந்து கொண்டனர். அடவு, பாடல், நடனம், இசை என தங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து பயிற்சி பெற்றனர். 
 
நடிகர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு இதுவரை அயல்நாட்டில் நடந்திடாத ஒரு அரிய நிகழ்வு என்பதால் இது உலக சாதனை பட்டியலில் சேர்ந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது. இதன் மூலம் தெருக்கூத்து கலைக்கு ஒரு மணி முடி சூட்டியதாக  எண்ணி நான் மகிழ்கிறேன்” என்று கூறியுள்ளார்..