ராயன் படத்தின் பின்னணி இசையை இன்னும் ரஹ்மான் தொடங்கவேயில்லையா? காரணம் என்ன?
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.
இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் படத்தின் ஷூட்டிங் நடந்தபோது மூன்று முறை அவர் செட்டுக்கு சென்று ஷூட்டிங்கை பார்வையிட்டாராம்.
இதுவரை அவர் எந்தவொரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் இத்தனை முறை சென்றதில்லையாம். அதே போல படத்தின் காட்சிகளைப் பார்த்து தனுஷை வெகுவாகப் பாராட்டியுள்ளாராம். படத்தின் பின்னணி இசைக்காக அவர் பிரத்யேகமாக பணிகளை மேற்கொள்ள உள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை படத்துக்கான பின்னணி இசை பணிகளை அவர் தொடங்கவேயில்லை. அதற்குக் காரணம் படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் சொல்லும் கண்டீஷன்களில் ஏ ஆர் ரஹ்மானுக்கு உடன்பாடு இல்லையாம். அதனால் பின்னணி இசை பணிகள் காலதாமதம் ஆகிவருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.