பேன் இந்தியா படமாக முருகதாஸின் அடுத்த படம்!
முருகதாஸ் இயக்கும் அடுத்த படத்தை பேன் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி மற்றும் சர்கார் ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்தவர். அந்த வரிசையில் நான்காவது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்க இருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது தனது அடுத்த படத்துக்காக பல கதாநாயகர்களிடம் கதை சொல்லி வருகிறாராம்.
இந்நிலையில் இப்போது தனது அடுத்த படத்துக்கான திரைக்கதையை முடித்து விட்டாராம். இந்த படத்தில் கதாநாயகனோடு ஒரு முக்கிய வேடத்தில் குரங்கு ஒன்று நடிக்க உள்ளதாம். இதற்காக அனிமேட்ரானிக்ஸ் தொழில் நுட்பத்தில் குரங்கை உருவாக்க உள்ளார்களாம். இந்த படம் தனக்கு திருப்புமுனையாக இருக்கும் என முருகதாஸ் நம்பிக்கையோடு உழைத்து வருகிறாராம்.
இந்த படத்தை கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனமான பிரைம் போகஸ் நிறுவனமே தயாரிக்க உள்ளதாம். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை ஹாலிவுட்டிலும் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.