ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VM
Last Updated : திங்கள், 7 ஜனவரி 2019 (10:57 IST)

வேறு ஆணுடன் சிரித்துபேசிய கள்ளக்காதலியை கொடூரமாக குத்திக்கொன்ற இளைஞர்!

செல்போனில் வேறுநபருடன் சிரித்து பேசிய கள்ளக்காதலியை இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்த சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் காவேரிப்பட்டணம் அருகே உள்ளது  கவுண்டர் கொட்டாய் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் செல்வி (வயது 32). இவர் திருமணம் ஆகி விவாகரத்தானவர். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்.  இவர்கள் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். 
 
செல்வி கிருஷ்ணகிரி ஜக்கப்பன் நகர் பகுதியில் உள்ள கிப்ட் கடையில் பணியாற்றி வந்தார். நேற்று வழக்கம் போல் செல்வி கடைக்கு வந்தார்.  அவரை பிற்பகல் 3 மணி அளவில் ஒரு இளைஞர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அப்போது செல்வியின் அலறல் சத்தம் கேட்டு கடைக்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்,  செல்வி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
 
பின்னர் அவர்கள் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக காவேரிப்பட்டணம் அண்ணா நகரை சேர்ந்த குலோப்ஜான் என்பவரின் மகன் தவுலத் (24) கிருஷ்ணகிரி டவுன் போலீசில் சரண் அடைந்தார். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,  
 
"நானும் செல்வியும் காவேரிப்பட்டணத்தில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலைப் பார்த்து வந்தேன்.  கடையில் வேலை பார்த்த நாட்களில் எனக்கும், செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நாங்கள் பழகி வந்தோம்.
 
கொஞ்ச நாட்கள் கழித்து நாங்கள் 2 பேரும் அந்த துணிக்கடை வேலையில் இருந்து நின்று விட்டோம். நான் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதேபோல செல்வியும் ஜக்கப்பன் நகரில் உள்ள கிப்ட் கடையில் வேலை பார்த்து வந்தார். ஆனாலும் எங்களுக்குள் பழக்கம் தொடர்ந்து வந்தது.
 
இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) மதியம் என்னை தொடர்பு கொண்ட செல்வி ரூ.2 ஆயிரம் கேட்டார். இதற்காக நான் அவரை சந்திக்க சென்றேன். அப்போது செல்வி மட்டும் கடையில் தனியாக இருந்தார். மேலும் அவர் செல்போனில் யாருடனோ சிரித்து சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவரிடம், ‘நீ யாருடன் பேசுகிறாய்?’ என்று கேட்டு தகராறு செய்தேன்.
 
அப்போது செல்வி, ‘நான் யாருடன் வேண்டும் என்றாலும் பேசுவேன். நீ எதற்காக கேட்கிறாய்?’ என்று கேட்டு என்னுடன் வாக்குவாதம் செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான் கடையில் விற்பனைக்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்திக்கொலை செய்தேன். என்றார்.