வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: ஞாயிறு, 12 நவம்பர் 2023 (09:50 IST)

தமிழக அரசின் அரசாணைகளை மதிக்காத பிரபல தியேட்டர்? புளூ சட்டை மாறன்

இன்று ரிலீசாகும் சல்மான் கானின் டைகர் 3 படத்திற்கு பல்வேறு காலைக்காட்சிகள் திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன என்று புளூ சட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

''தமிழ்ப்படங்களாகிய ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா 2 படங்களுக்கு மட்டுமே காலைக்காட்சி அனுமதியை தமிழக அரசு அனுமதித்துள்ளது. அதுவும் காலை 9 மணி முதல் மட்டுமே. ஆனால் காலை 7 மணி முதல் ஏகப்பட்ட காட்சிகளை இந்த தியேட்டர் திரையிடுவதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளதா? இல்லாவிட்டால் அது சட்டப்படி குற்றம்தானே? இதற்கு முன்பு சன்னி தியோல் நடித்த Gadar 2 படத்திற்கு நள்ளிரவுக்காட்சிக்கான புக்கிங் பற்றிய ஆதாரத்தை வெளியிட்டு இருந்தோம். அதற்கும் அரசின் அனுமதி இல்லை. 'இனிமேல் நள்ளிரவு, அதிகாலைக்காட்சிகளை தமிழக திரையரங்குகளில் போட மாட்டோம். முதல் காட்சி காலை 9 மணிக்கு மட்டுமே. நேர்மை, நீதி, சட்டம்' என்று பல்வேறு செய்தி மற்றும் யூட்யூப் சேனல்களில் வீரவசனம் பேசியது யார் தெரியுமா? தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்ரமணியம். இப்போது மீண்டும் இந்த உறுதிமொழி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்த தியேட்டருக்கு முதலாளி யார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது இவர் எப்படி எதிர்த்து பேசுவார். என்ன நடவடிக்கை எடுப்பார்? அந்த சங்கத்தில்..இந்த சட்ட மீறலை தட்டிக்கேட்டும் திராணி ஒருவருக்கு கூடவா இல்லை? 'போதைப்பழக்கத்தை கைவிடுங்கள், ஹெல்மட் போடுங்கள்' என மக்களுக்கு அறிவுரை சொல்லும் பெரிய ஹீரோக்களும், இயக்குனர்களும் இதைப்பற்றி எல்லாம் வாய் திறக்க வக்கற்றவர்கள். அவர்களுக்கு முதுகெலும்பும் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என ஒருவரும் வாய் திறக்கப்போவதில்லை. 'தமிழ் சினிமாவில் இருந்து கொண்டு, அதன் மூலம் சோறுசாப்பிட்டு, நெகட்டிவ் விமர்சனம் செய்கிறாயே?' என்று ஒவ்வொரு சேனலிலும் விமர்சகர்களை திட்டி சவுண்ட் விடத்தான் லாயக்கு. அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா (தயாரிப்பாளர்), பிரவீன் பூந்தி, செய்யாறு ஓலா போன்ற வடை சுடும் போலி பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்கள், சோசியல் மீடியா இன்ஃப்ளுயன்ஸர்கள் என யாரும் இதைப்பற்றி பேசியதுமில்லை. பேசப்போவதுமில்லை. திரையரங்க உரிமையாளர் சங்க செயலாளரும், திருச்சி தியேட்டர் ஓனருமான ஸ்ரீதர் அவர்கள் மட்டுமே நேர்மையான பேட்டிகளை தந்து வருகிறார்.

ஆனால் சங்கத்தலைவருக்கு எதிராக அவர் எப்படி பேச முடியும்? உங்கள் அனைவரிடமும் ஒரே ஒரு கோரிக்கை: இனிமேல் பேட்டிகளில் நேர்மை, நீதி பற்றி தயவு செய்து பேசாதீர்கள். தமிழக மக்கள் கைகொட்டி சிரிப்பார்கள். ஏற்கனவே சிரித்துக்கொண்டும் இருக்கிறார்கள்'' என்று தெரிவித்துள்ளார்.