வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 29 ஜூலை 2014 (15:33 IST)

பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் தள்ளிப் போனது

பார்த்திபன் தயாரித்து இயக்கியிருக்கும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் ஆகஸ்ட் 1 -ம் தேதி வெளியாவதாக இருந்தது. தற்போது பட வெளியீட்டை ஆகஸ்ட் இறுதிக்கு தள்ளி வைத்துள்ளார் பார்த்திபன்.
தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. புதுப்படங்களை வெளியிடும் தரத்துடன் இருக்கும் திரையரங்குகளின் எண்ணிக்கை 800 -க்கும் குறைவாகவே உள்ளது. டிக்கெட் கொள்ளை, பார்க்கிங் கொள்ளை, தின்பண்ட கொள்ளை என திரையரங்குகள் கொள்ளையர்களின் இருப்பிடமாக மாறி வருவதால் பொதுமக்கள் இந்த கொள்ளைக்கூடாரங்கள் பக்கம் போகவே அஞ்சுகின்றனர். நிலைமை இப்படியே நீடித்தால் 800 என்பது விரைவில் 400 ஆவதற்கான வாய்ப்பு உள்ளது.
 
நிற்க. இந்த திரையரங்கு பற்றாக்குறை காரணமாக ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேல் படங்கள் வெளியானால் சிக்கலாகிவிடுகிறது. மாஸ் நடிகர்களின் படம் என்றால் ஒன்றுக்கு மேல் தாங்காது. ஆகஸ்ட் 1 -ம் தேதி பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் மற்றும் சி.வி.குமாரின் சரபம் படங்கள் வெளியாவதாக இருந்தன. ஜிகிர்தண்டாவின் வெளியீட்டு தேதியை ஜுலை 25 -லிருந்து ஆக. 1 -க்கு அப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் மாற்றியதால் ஆகஸ்ட் 1 இருமுனை போட்டி மும்முனையானது. ஓபனிங் பாதியாக அடிபடும் என்பதால் பார்த்திபன் தனது படத்தை ஆகஸ்ட் 29 வெளியிடுவதாக அறிவித்துள்ளார். 
 
ஜிகிர்தண்டாவுக்கும், சரபத்துக்கும் வழிவிட்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். இதேபோல் தயாரிப்பாளர்கள் விட்டுக் கொடுக்க முன்வர வேண்டும். இதனை புரிந்து கொண்டு ஆகஸ்ட் 29 வெளியாகும் என்னுடைய படத்துக்கும் இப்படி வழிவிட வேண்டும் என்று பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார்.