வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2016 (12:35 IST)

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள் - விக்ரம் பேட்டி

தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள் - விக்ரம் பேட்டி

இருமுகன் படத்தின் சக்சஸ் மீட் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. விழாவில் கலந்து கொண்டு விக்ரம் பேசியதோடு நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
 

 
இருமுகன் வெற்றிப் படம் என்று அனைவரும் கூறுகின்றனர். உண்மையில் அது வெற்றிப் படம்தானா? விக்ரம் என்ன சொல்கிறார்?
 
இரு முகன் படம் வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றி எனக்கு மட்டுமல்ல. படக்குழுவினர் அனைவரையும் சேரும். 
 
இருமுகனில் விக்ரம் அகிலன், லவ் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார். இதில் எந்த கதாபாத்திரம் நடிக்க சிரமமா இருந்தது?
 
இருமுகன் படத்தில் நான் அகிலன், லவ் என 2 வேடங்களில் நடித்து இருக்கிறேன். 2 வேடங்களில் நடிப்பது எவ்வளவு கஷ்டமான விஷயம் என்பது எல்லோருக்கும் தெரியும். லவ் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கடினமாக உழைத்தேன். உடல் மொழியாலும், வசன உச்சரிப்பாலும் வேறு ஒரு நபரை காண்பிக்க சிரமப்பட்டேன். வெளிநாட்டில் நடந்த படப்பிடிப்பில், இரண்டு வேடங்களிலும் மாறி மாறி நடிப்பதற்கு எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொண்டேன் என்பது என்னுடன் பணி புரிந்த படக்குழுவினருக்கு தெரியும்.
 
விக்ரம் ரசிகர்களுக்கு அவரிடம் உள்ள ஒரே ஆதங்கம், ஒரு படத்துக்கு அதிக நாள்கள் எடுத்துக் கொள்கிறார் என்பது. ஏன் இப்படி?
 
ஒரு படத்துக்கும், இன்னொரு படத்துக்கும் நான் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்று சிலர் ஆதங்கப்படுகிறார்கள். எனக்கு பட எண்ணிக்கை முக்கியமல்ல. தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்பதே என் குறிக்கோள்.
 
இருமுகன் விமர்சனரீதியாக பல தாக்குதல்களை எதிர்கொண்டது. தனிப்பட்ட முறையில் இந்தப் படம் விக்ரமுக்கு திருப்தியா?
 
ஒரு நடிகருக்கு முகவரி கொடுப்பது, அவர் நடிக்கும் கதாபாத்திரங்களும், அவர் நடித்து திரைக்கு வந்த கடைசி படமும்தான். அப்படி ஒரு படமாக எனக்கு அமைந்து இருக்கிறது, இருமுகன். படம் வெற்றிகரமாக ஓடுவதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
 
நயன்தாரா, நித்யா மேனன் குறித்து விக்ரம் என்ன சொல்கிறார்?

 
நயன்தாரா நல்ல நடிகை. அவருடன் நடித்ததில் சந்தோஷம். நித்யா மேனன் மலையாளத்தில் வசனங்களை எழுதி வைத்துக் கொண்டு நடித்தார். அந்த வசனத்தை இப்படி பேசலாமா என்று டைரக்டரிடம் யோசனை கேட்பார்.
 
இசை...?
 
நான் நடித்த பல படங்களுக்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். சாமுராய் படத்தில் அவர் இசையமைத்த மூங்கில் காடுகளே என்ற பாடலைத்தான் என் செல்போனில் காலர் டியூனாக வைத்து இருக்கிறேன்.