வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 2 மே 2015 (15:52 IST)

எனக்கு இசை பற்றி இன்னும் எதுவும் தெரியாது - இளையராஜா பேட்டி

எனக்கு இசை பற்றி இன்னும் எதுவும் தெரியாது என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.
 
சின்னப் படங்கள், பெரிய படங்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா படங்களின் பாடல்கள் வெளியீட்டு விழாக்களில் இளையராஜா கலந்து கொள்கிறார். அவர் இசையமைத்திருக்கும் புதிய படம், கிடா பூசாரி மகுடி. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜாவின் பேச்சு வழக்கம் போல. கொஞ்சம் இசை, கொஞ்சம் சுய புராணம். அந்தப் பேச்சு உங்களுக்காக.
 

 
நான் ஒற்றை மதகு:
 
பாக்யராஜ் போன்றவர்கள் அணையில் உள்ள எட்டு மதகுகள் போன்றவர்கள். அவர்கள் பலதுறைகளை கையாள்கிறார்கள். நான் ஒரேயொரு மதகு போன்றவன். எனக்கு இசை மட்டும்தான் தெரியும். வேறு எதுவும் தெரியாது. அதனால் அந்த இசையின் வேகம் அதிகமாகதான் இருக்கும்.
 
சத்தியம் மட்டுமே பேசுவேன்:
 
இந்தத் தொழிலுக்கு வந்தபோது எப்படி உழைத்தேனோ, அதே ஈடுபாட்டோடுதான் இப்போதும் உழைக்கிறேன். அரைமணி நேரத்தில் 5 படங்களுக்கு, அதாவது ஒரு படத்துக்கு நான்கு பாடல்கள்வீதம் 20 பாடல்களுக்கு கம்போஸ் செய்து தந்திருக்கிறேன். இதற்கு சாட்சி யாரும் தேவையில்லை. நான் சத்தியம் மட்டுமே பேசுபவன்.
 
மேலும் அடுத்தப் பக்கம்

இசை எனக்கு தெரியாது:
 
இதுதான் இசை என்று தெரிந்தால் உட்கார்ந்துவிடுவேன். ஆனால், இசைப் பற்றி எனக்கு இன்னும் தெரியாது (இளையராஜா தனது பேச்சின் தொடக்கத்தில், இசை மட்டுமே எனக்கு தெரியும் என்று கூறியது முக்கியமானது). இசையைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கிறேன். திருவள்ளுவர் திருக்குறளை எழுதும்போது தெரியாமல்தான் எழுதினார். அதேபோல் உங்களுக்கும் எனக்கும் தெரியாத இசையை கொடுக்கத்தான் நினைக்கிறேன். அதன் வெளிப்பாடாகதான் எனது இசையும் வந்து கொண்டிருக்கிறது.
 

 
ருத்ரம்மாதேவி:
 
ருத்ரம்மாதேவி படத்துக்கு பின்னணி இசை அமைக்க லண்டன் சென்றேன். உலகளவில் கைதேர்ந்த 120 கலைஞர்களுக்கான இசையை 15 நாள்கள் தயார் செய்து கொண்டு போனேன். இந்தப் படத்திற்குதான் நான் 15 தினங்கள் எடுத்துக் கொண்டேன். 
 
காலம் கடந்து நிற்கும்:
 
ஒரு மனிதனின் கற்பனை திறன் என்பது வேறு, நடைமுறை வாழ்க்கை என்பது வேறு. ஆனால் நான் இந்த இரண்டையும் சரிசமமாக எண்ணி பயணித்து, இசையை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். எத்தனை காலம் கடந்தாலும் எனது இசை, காலம் கடந்து நிற்கும். அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது. இறைவன் எனக்கு அப்படியொரு வரத்தை அளித்திருக்கிறான்.