எஸ்கேப் ஆர்டிஸ்ட் என் படத்தை வெளியிடுவது என் கொடுப்பினை - முன்னோடி இயக்குனர் குமார் பேட்டி
ஸ்வஸ்திக் சினி விஷன் தயாரிப்பில் உருவான முன்னோடி படத்தை மதனின் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிடுகிறது. இதுவே அந்தப் படத்துக்கு பெரும் விளம்பரமாகியிருக்கிறது. படம் குறித்து, படத்தின் இயக்குனர் குமார் நம்மிடம் பேசினார்.
முன்னோடி படத்தின் கதை என்ன?
வாழ்க்கையில் யாரை அல்லது எதை முன்னோடியாக எடுத்துக் கொள்கிறோம் என்பது முக்கியம். ஒருவன் யாரை முன்னோடியாகக் கொண்டு பின்பற்றுகிறானோ அதைப் பொறுத்தே அவனது வாழ்வு உயர்வாகவோ தாழ்வாகவோ அமையும். இந்தக் கருத்தை பின்னணியாக வைத்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம்.
யார் நடித்திருக்கிறார்கள்?
ஹரீஷ், யாமினி பாஸ்கர் இருவரும் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். கங்காரு படத்தின் நாயகன் அர்ஜுனா, குற்றம் கடிதல் பாவல் நவநீதன் இருவரும் வில்லன்களாக நடித்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் இடம்...?
இது சென்னையில் நடக்கும் கதை. என்றாலும், பிற வட்டார மொழியையும் சில பாத்திரங்கள் பேசுகின்றன.
படத்தில் பாடல்கள் உண்டா?
படத்தில் நான்கு பாடல்கள். தவிர இரண்டு சிறு பாடல்களும் உண்டு.
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் படத்தை வெளியிடுவது பற்றி...?
படம் பார்த்ததும் மதன் சார் கட்டிப்பிடித்து பாராட்டினார். அதுவே புதுமுக இயக்குனரான எனக்கு பெரிய வெற்றி. இன்றுள்ள வியாபார போராட்டத்தில் படம் வெளியாவது என்பது குதிரைக் கொம்பு. ஆனால் மிகப்பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. இது என் கொடுப்பினை.
படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளதா?
பெரிய நிறுவனம் வெளியிடுவதால் எளிதாக இந்த படம் மக்களிடம் சென்றுவிடும். மக்களிடம் சென்றுவிட்டால் அவர்கள் நிச்சயம் இப்படத்தை வெற்றிப்படமாக்கிவிடுவார்கள்.