வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 17 ஜனவரி 2020 (10:24 IST)

மோகன்லாலுடன் நான்....என் கனவு நிறைவேறியது - நடிகை மிர்னா நெகிழ்ச்சி!

மோகன்லாலுடன் நடிக்க வேண்டுமென்ற கனவு 'பிக் பிரதர்' மூலம் நிறைவேறியது - நடிகை மிர்னா
 
இயக்குநர் சித்திக் மோகன்லாலை நாயகனாக வைத்து இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அப்படத்தின் நாயகியாக மிர்னா நடிக்கிறார். இயக்குநர் சித்திக் பற்றியும், மோகன்லாலுடன் நடித்த அனுபவங்களைப் பற்றி மிர்னா பகிர்ந்து கொண்டதாவது:-
 
எனது தாய்மொழி மலையாளமாக இருந்தாலும், தமிழ் மொழியிலும் சரளமாகப் பேசுவேன். அதற்கு காரணம், நான் கோயமுத்தூரில் தான் எனது கல்லூரி படிப்பை முடித்தேன். எனது நெருங்கிய குடும்ப நண்பர் ஜோதி மேனன் இயக்குநர் சித்திக்கின் நண்பர் ஆவார். அவர் ஒருமுறை இயக்குநர் சித்திக்கை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அடுத்த நாளே மோகன்லால் ஜோடியாக நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்று நினைக்கவில்லை. ஏனென்றால், அனைத்து கலைஞர்களின் தேர்வும் முடிந்திருந்தது. இது எனக்கு எதிர்பாராமல் கிடைத்த வாய்ப்புதான்.
 
ஜுன் மாதம் தொடங்கி டிசம்பர் வரை ஏறத்தாழ 145 நாட்கள் படிப்பிடிப்பு நடித்தியிருக்கிறோம். மோகன்லாலுடன் தமிழில் ‘காவலன் திரைப்படத்திற்குப் பிறகு மலையாளத்தில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தை இயக்கினார் சித்திக். அதன்பிறகு சித்திக் இயக்கும் படம் ‘பிக் பிரதர்’. அவர் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்ற எனது கனவு இப்படத்தின் மூலம் நிறைவேறியது.மேலும், மலையாளத்தில் அறிமுக நாயகியாக மோகன்லாலுடன் ஜோடியாக நடித்தது பெருமையாக இருந்தது. மலையாள சினிமாவில் இனி நான் சாதிக்க வேறொன்றுமில்லை எனும் அளவிற்கு இந்த வாய்ப்பு மதிப்புமிக்கது.
 
‘பிக் பிரதர்’ மலையாளம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் நடிக்கிறார்கள். சல்மான்கானின் சகோதரர் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ஆகையால், இது மலையாளத்தில் பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். தற்போது இசை வெளியீட்டு விழா முடிந்து ஜனவரி 16ஆம்  தேதி வெளியாகிறது. இசை வெளியீட்டிற்குப் பிறகு அனைவரிடமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் முற்றிலும் குடும்ப கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பொழுதுபோக்கான படம். மோகன்லால் நடிக்கும் படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கொடுக்கும். அதேபோல், இந்த படமும் மாபெரும் வெற்றியடையும்.
 
முதல் நாள் படப்பிடிப்பில் மோகன்லாலுடன் நடிக்க வேண்டும் என்றதும் பதட்டத்துடன் தான் சென்றேன். ஆனால், அவருடன் கேமரா முன் நின்றதும் பதட்டம் மறைந்து விட்டது. மாபெரும் நடிகர் என்ற எண்ணம் இல்லாமல் இயல்பாக பழகினார். அது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குழுவினருமே நகைச்சுவையோடு பேசி சிரித்து கலகலப்புடன் தான் இருப்பார்கள். மேலும், எனக்கு இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியும் இருக்கிறது. ஓடுகின்ற காரில் நடக்கின்ற சண்டைக் காட்சியில் நடித்தது சவாலாக இருந்தது மற்றும் இது தான் எனது முதல் அனுபவம். அந்த சண்டைக் காட்சியில், மோகன்லாலுக்கு கையில் அடிபட்டுவிட்டது அதை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை முடித்து விட்டார். அதன்பின் செய்தித்தாள்களில் பார்த்து தான் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பது தெரியவந்தது. இம்மாதிரி அர்ப்பணிப்போடு நடிக்கக்கூடிய மோகன்லாலை பார்த்து வியந்தேன்.
 
காதல், ஆக்ஷன், நகைச்சுவை, குடும்ப செண்டிமெண்ட் என்று எல்லாம் கலந்த தொகுப்பு திரைப்படமாக 'பிக் பிரதர்' இருக்கும். இதுபோன்ற திரைப்படம் இனிமேல் வருமா என்று தெரியாது. நான் இந்த படத்தில் வந்த பிறகு இன்னும் வண்ணமயமாக இருப்பதாக உணர்ந்தேன். ஏனென்றால், பெரிய தொழிலதிபரின் மகள், நன்றாக படித்த அறிவுமிக்க, சுட்டித்தனம் மிகுந்த பெண்ணாக நடிக்கிறேன். மோகன்லாலை தவிர மற்ற நடிகர், நடிகைகளுடன் நடிக்கும் போது அவர்கள் கேமரா முன் எப்படி நிற்கிறார்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டேன்.
 
மோகன்லாலிடம் எப்படி இவ்வளவு படங்கள் நடித்து விட்டு எளிமையாக இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, லேசான புன்னகையுடன் நடிப்பது எனக்கு பிடித்திருக்கிறது என்று கூறினார். தொழில்நுட்பம் சார்ந்த சிறு சிறு விஷயங்களையும் விளக்கமாக கற்றுக் கொடுப்பார். மிகப்பெரிய நடிகருக்கு இவற்றையெல்லாம் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இப்படத்தில் நடித்ததை விட அதிகமாக கற்று கொண்டேன் என்பது தான் மகிழ்ச்சியளிக்கிறது.
 
எந்த மொழியில் நடித்தாலும் நல்ல திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது விருப்பம். மலையாளத்தில் மோகன்லாலுடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென்ற கனவு இப்படம் மூலம் நிறைவேறியுள்ளது. தமிழில் விஜய் மற்றும் அஜித்துடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை உள்ளது. 'பிக் பிரதர்' படத்திற்கு பிறகு மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அது பற்றிய செய்திகள் 'பிக் பிரதர்' படம் வெளியான பிறகு அறிவிப்பு வெளியாகும். மேலும், 'பிக் பிரதர்' படத்தை எந்த மொழியில் மறு உருவாக்கம் செய்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தில் நானே நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது  நடிகை மிர்னா 'பிக் பிரதர்' படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றிக் கூறினார்.