திங்கள், 18 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 10 மே 2016 (12:16 IST)

பாட்டி பேரன் உறவை பற்றி பேசும் படம் தான் மருது - இயக்குனர் முத்தையா பேட்டி

பாட்டி பேரன் உறவை பற்றி பேசும் படம் தான் மருது - இயக்குனர் முத்தையா பேட்டி

குட்டிப்புலி, கொம்பன் படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கியிருக்கும் படம், மருது. மே 20 படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில் படம் குறித்து அவர் அளித்த பேட்டி.


 
 
மருது என்ன மாதிரியான படம்?
 
மருது என் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் மண்மணம் மாறாத இன்னொரு கிராமிய திரைப்படமாக இருக்கும். ஒரு பாட்டிக்கும் பேரனுக்குமான கதைதான் மருது. 
 
கொஞ்சம் விளக்கமாக கூற முடியுமா?
 
தாய் தகப்பனை இழந்தவர்களுக்கு முதலில் கைகொடுப்பது பாட்டியாகதான் இருக்கும். அது மகன் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி, மகள் வழி வந்த பேரன் பேத்தி ஆக இருந்தாலும் சரி. நம்முடைய பெற்றோர்களை தாண்டி நம் பாட்டி நமக்கு வாங்கி கொடுக்கும் பொருட்கள் நிச்சயம் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாட்டி பேரன் என்ற தவிர்க்க முடியாத உறவை பற்றி பேசும் படம் தான் மருது.
 
விஷாலை தேர்வு செய்ய என்ன காரணம்?
 
என்னுடைய கதையின் நாயகன் ஒரு லோடு மேன். உலகத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அனைவருக்கும் உடல்வாகு தெறிப்பாகத்தான் இருக்கும். எல்லா ஊரிலும் மூட்டைகளை சுமக்கும் லோடு மேன் என்பவர்கள் இருப்பார்கள். அவர்களுடைய வாழ்க்கைக்காக மிகவும் கடினமாக உழைப்பார்கள். அவர்களை பார்க்க நார்நாராக நல்ல வளர்த்தியாக, வயிறு என்ற ஒன்றே வெளியே தெரியாத அளவிற்கு இருப்பார்கள். அவர்களுடைய வேலை காலை 10 மணிக்கு ஆரம்பித்தது என்றால் இரவு 10 மணி வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். இப்படி இருக்கும் லோடு மேன் கதாபாத்திரத்துக்கு விஷால் மிகச்சரியாக பொருந்தி இருந்தார். அவருடைய உடல் அமைப்பும், நிறமும் இந்த கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தியது.
 
ஆக, உங்கள் படத்தின் நாயகன் ஒரு லோடு மேன்...?
 
ஆம் படத்தில் மருது என்னும் கதாபாத்திரம் மூட்டைகளை சுமக்கும் லோடு மேன் கதாபாத்திரமாகும். 
 
உண்மைச் சம்பவத்தை வைத்து படங்கள் இயக்குவது உங்கள் பாணி. மருதுக்கு யார் இன்ஸ்பிரேஷன்...?
 
மருது கதாபத்திரத்துக்கு எடுத்துகாட்டாக என்னுடைய பெரியப்பாவை எடுத்து கொண்டேன். அவர் கையில் சிங்கத்தையும், நெஞ்சில் புலியையும் பச்சை குத்தி இருப்பார். நான் சிறுவயதில் இருந்து அதை பார்த்து ரசித்து இருக்கிறேன். நாம் ஒரு நாள் திரைப்படம் இயக்கும்போது இதேபோல் ஒரு கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு. அப்படி என்னுடைய பெரியப்பாவை போன்ற ஒரு கதாபாத்திரமாக தான் மருது என்னும் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். 
 
உங்கள் பெரியப்பாவை படத்தில் அப்படியே பிரதிபலிக்கிறாரா விஷால்...?
 
நிஜத்தில் என்னுடைய பெரியப்பா வேலைக்கு செல்லும் போது மேலாடை ஏதும் அணிந்திருக்கமாட்டார். ஆனால் படத்துக்காக விஷால் முண்டாபனியன் அணிந்திருப்பதுபோல் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறேன். 
 
சிங்கம், புலிக்கு எதாவது காரண காரியம் வைத்திருக்கிறீர்களா?
 
சிங்கத்தை நாம் பார்த்தாலே மிரட்டலாக இருக்கும். சிங்கத்துக்கு அப்படி ஒரு ஆஜானுபாகுவான தோற்றம் உண்டு. புலி தன்மானம் உள்ள ஒரு மிருகம். அதனால் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த ஒருவன் அவ்விரு மிருகங்களின் உருவத்தையும் பச்சை குத்தி இருப்பான்.