சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க கோரி அதிபர் சிறிசேனாவுக்கு விக்னேஷ்வரன் கடிதம்

Ashok| Last Updated: புதன், 14 அக்டோபர் 2015 (18:00 IST)
பல்வேறு சிறைகளில் எந்தவித விசாரணையுமின்றி அடைக்கப்பட்டிருக்கும் 200க்கும் மேற்பட்ட தமிழர் அரசியில் கைதிகளை இலங்கை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வலியுறுத்தியுள்ளார்.


 
பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் அரசியல் கைதிகள், தங்களை இலங்கை அரசு விடுதலை செய்ய வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்நிலையில், தமிழர்களை விடுதலை செய்யக் கோரி இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வடக்கு மாகாண விக்னேஷ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.
 
அந்தக் கடிதத்தில், விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளதாவது:  பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டாலும், இதுவரை அவர்கள் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. எனவே, அவர்களை பிணையில் விடுவிக்க முடியும் என்று அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், எந்தவித விசாரணையுமின்றி கடந்த சில ஆண்டுகளாக தமிழர்கள் சிறையில் வாடுவது துரதிருஷ்டவசமானது என்றும். இவர்களின் பிரச்னைகளை இலங்கை அரசு உணர்வுப்பூர்வமாகவும், கருணையோடும் அணுக வேண்டும் என்றும் சிறையில் வாடும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்பதை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகளை நாம் எடுத்தால், கைதிகளுக்குத் திருப்தி ஏற்படும் என்றும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
 
அதற்கான முதல்கட்ட நடவடிக்கையாக சிறையில் வாடும் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள் எந்தக் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை வகைப்படுத்தி ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும்.
 
அவ்வாறு தயாரிக்கும் பட்டியலை வைத்துக்கொண்டு சிறிய குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க முடியும். அல்லது அவர்களை பிணையிலாவது விடுவிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

 
இதற்கிடையே, "எங்களை விடுவிக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தமாட்டோம்' என்றும உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழர் அரசியில் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
 
இவர்கள்,  இலங்கையில் உள்நாட்டு போர் நடைபெற்றபோது, கைது செய்யப்பட்டு பல்வேறு சிறையில் அடைக்கப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதில் மேலும் படிக்கவும் :