வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. இலங்கை செய்தி
  3. இலங்கை முக்கிய செய்தி
Written By Lilly Jeni Jeevaraj
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2015 (03:15 IST)

ஈழத்து மண் மீது ஒரு இனம் புரியாத காதல்.........!

ஈழம் என்ற வார்த்தைக்கு எவ்வளவு சக்தி உள்ளதோ, அது போல அந்த மண்ணுக்கும் அளவு கடந்த சக்தி உண்டு. அதை வார்த்தைகளால் வர்ணித்துவிட முடியாது. அந்த அளவு தமிழர்களின் உடல், உயிர், ஆவி மீது அது கலந்துவிட்டது. ஆம், அது உண்மை தான்.
 
ஈழம் குறித்தும், அந்த நாட்கள் குறித்தும் ஒரு மறக்கமுடியாத நினைவு பகிர்வு இதோ:-
 
அடர்ந்து வளர்ந்திருக்கும் அந்த அலரிச் செடியின் அழகும் பூக்களின் நறு மணமும் இன்னமும் பல நெகிழ்ச்சியான சம்பவங்களும் மனதை அங்காங்கே வருடிக்கொண்டிருக்கின்றன.
 
ஆண்டுகள் பல கழிந்து விட்டன நவநாகரீக வாழ்க்கைக்குள் என்னை புகுத்தி வாழ பழகிவிட்டேன், அமைதியான ஒரு இன்பம் அல்லது ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கையின் பக்கம் எதுவென்பது கூட அவ்வப்போது மறந்து போகின்ற இந்த காலகட்டத்தில் எனது நவாலி வீடும் அங்கே முற்றத்தில் எமது மண்ணிற்கு ஏற்றாற் போல் வளர்ந்திருக்கும் அலரி மற்றும் கடதாசி செடிகளின் அழகும் தான் இப்போதும் எனது மனதிற்கு தேவையான ஆறுதல்களையும் உள்ளரங்க அமைதியையும் அளிக்கின்றது என்றால் அது மிகையில்லை.
 
காலம் பல மாறிப்போச்சு யுத்தம் ஓய்ந்து விட்டதாக பல மேடைப் பேச்சுக்கள், நம்பிக்கையூட்டும் கருத்துக்களுக்கு அப்பால் மீண்டு;ம் எனது தீவிற்கு எப்போது பயணிப்பேன் என்ற ஏக்கம் எனது நெஞ்சத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.
 
சங்க காலப் படல்களின் மையங்களுக்கு ஏற்றாற் போல் அந்த செம்மண்ணில் நீர் சேர்ந்தாற் போல் எனது நெஞ்சமும் அந்த மண்ணில் கலந்து விட்டன. அவ்வாறான தொரு காதல் பற்று ஈர்ப்பு எல்லாம் எனது மண் மீது என்னை மண்டியிட செய்துவிட்டன.
 
1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளில் எனது மூத்த தமையணை இழந்து தந்தையை இழந்து பல இடர்பாடுகளுக்கு மத்தியில் அந்த அழகான பனை தென்னை மரங்களின் நிழல்களுக்கிடையில் அன்பே உருவான எனது இல்லம் நான் சைக்கிள் ஓடிப் பழகிய வீட்டின் முற்றம், தினமும் பூப்பறிக்க எனது அண்ணன்மாருடன் மரம் ஏறிய அந்த ஞாபகங்கள் இன்னும் எத்தனை எத்தனையோ...
 
அந்த அலரி மரத்தின் கீழே கட்டப்பட்டிருந்த பங்கர் அங்கே நான் விளையாட்டாக சோறு கறி சமைத்து மகிழ்ந்து அதனை அனைவருக்கும் பரிமாறும் போது எனது அம்மா என்னை அள்ளி அணைக்கும் அந்த அன்பின் தூறல்களும் அவரின் முகத்தில் பொங்கும் பெருமிதமும் இப்போது நினைத்தாலும் அஹா அந்த அன்பிற்கு இந்த உலகில் எவையும் ஈடிணையில்லை.
 
அப்போது நினைத்திருப்பார்கள் போலும் தமது கடைசிக் காலத்தில் அவர்கள் இருவருக்கும் நான் கஞ்சி ஊத்துவேன் என்று. அந்த குருவிக் கூட்டின் முத்துச்சரம் போன்ற ஒரு குஞ்சாய் மூன்று ஆண்களுக்கு நான் ஒருத்தி தான் பெண்ணாய் பிறந்தேன் எவ்வளவு எதிர்பார்ப்புக்கள் எவ்வளவு அன்புகள் எத்தனை செல்லம் எண்ணி முடியாத அந்த இன்ப உணர்வுகளுக்கு வார்த்தைகளினால் மாத்திரம் வரையறை போட நான் விரும்பவில்லை.
 
எனது உறவுகளின் அன்பு, பாசம், சந்தோசம் இவை எல்லாவற்றையும் அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு பருவம் எட்டாத அந்த 10 வயது மாத்தரமே கிடைக்கப்பெற்றது.
 
பொக்கிசமாய் என்னைப் பேணிப் பாதுகாத்த ஒவ்வொரு தூண்களும் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது அழிக்கப்பட்டு விட்டன. நெஞ்சைப் பிளக்கும் அந்த வேதனைகளுக்கு மத்தியிலும் நான் ஈழத்துப் பெண்ணல்லவா, அத்தனை துன்பங்களையும் சகித்துக் கொண்டு எனது ஊரை விட்டுப் புறப்பட்டேன். எத்தனை இன்னல்கள் எத்தனை துன்பங்கள் எத்தனை அலைச்சல்கள் வீடில்லா நாடில்லா உறவுகளில்லா ஓர் அனாதையாக அந்த 10 வயதில் எனது பயணம் தனிமையில் தொடங்கியது.
 
எனது முன்னோர்கள் செய்த சில நற்காரியங்களும் எனது குடும்பத்தாரின் மேலான ஆத்ம சக்தியும் தான் என்னை இன்னமும் வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது என்று கூறுவதில் எனக்கு ஒப்பில்லா உவகை என்றே கூற முடியும்.
 
சுமார் 196 பேரை பலி கொண்ட இந்த நவாலி சேர்ச் மீதான தாக்குதலில் எனது உறவுகளை இழந்து தனிமையாக எனது பயணத்தை தொடர்ந்த போதிலும் மீண்டும் மயான அமைதியாக காட்சியளித்த எனது இல்லத்தை விட்டு வெளியேற மனமில்லாது மீண்டும் ஒரு முறை எனது வீட்டிற்கு சென்றேன் அங்கே என்னை அழைத்துவரச் செய்தது எனது உறவுகளின் உண்மையான அன்பா அல்லது கடவுளின் அருட்செயலா என்பது இன்னமும் புரியாத புதிர் என்றே கூற முடியும்.
 
அந்த செல்லடிகள் ஒப்பாரி ஓலங்களுக்கு மத்தியிலும் நான் என்னை மறந்து மகிழ்ந்த அந்த பெரும் பாக்கியம் எனது தாயை கண்டது தான் பித்த பிரமை பிடித்தாற் போன்றிருந்த எனது அம்மாவை மீண்டும் ஒரு முறை கண்ட அந்த ஒரு நிமிட கனப்பொழுது தான் எனது வாழ்வில் எத்தனை காலங்கள் புரண்டோடினாலும் என்றுமே மிக முக்கிய மகிழ்ச்சிகரமான சம்பவம் என்றே கூறுவேன்.
 
அத்தனை உறவுகளுக்கும் மொத்தமாக நான் இருக்கின்றேன் எனக் கூறி எனது அம்மாவை அழைத்துக் கொண்டு உயிரிழந்த எனது உறவுகளின் இறுதிச் சடங்குகளை நடத்தி விட்டு எனது கிராமம் நான் வசித்த அந்த அழகிய இல்லம் அந்த மகிழ்ச்சி எல்லாவற்றையும் அங்கே அந்த புதைகுழியில் போட்டு புதைத்து விட்டு வந்தவள் தான் மீண்டும் அந்த செம்மண்ணின் வாசனையை நுகர, எனது பயணத்தை மேற்கொள்ள இன்னமும் வழி பிறக்கவில்லை.
 
எத்தனை துன்பங்களை வாழ்க்கையில்  சந்தித்தாலும் காலம் கடந்தும் மாறாத அந்த மண்வாசனை மட்டுமன்றி அங்கே நான் அனுபவித்த அந்த மகிழ்ச்சிகரமான வாழ்;க்கையும் தான் இன்றும் எனது வாழ்வை நகர்த்திச் செல்கின்றது. மீண்டும் ஒரு நாள் காணாமல் போன அண்ணாவை எங்கேனும் சந்திப்போம் என்ற  தளராத மன உறுதியுடன்     அன்னையை பிரிந்து தூரத்தில் இருந்து அவருக்கு நம்பிக்கையை மட்டுமே விதைத்துக்கொண்டிருக்கின்றேன்.
 
தனது மாமனாரின் அருகில் தனது மகனை துண்டாடப்பட்ட சடலமாக   புதைத்தது கூட தெரியாத எனது அம்மா... தனது மகனை மீண்டும் சந்திப்போம் உச்சிமுகர அவனை அண்ணாந்து பார்ப்போம் என்ற அந்த     நம்பிக்கையுடனும் விரக்தி பொங்கி பித்தம் பிடித்து நெஞ்சம் பிளக்கும் வேதனையுடனும் எனது தாயின் காலங்கள் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது.
 
தப்பித் தவறி என்றாலும் ஈழத்து மண்ணில் அல்லவா பிறந்துள்ளேன். எனது மண்ணிற்கும் மூத்தோர் குலத்திற்கும் ஏற்றாற் போன்று ஒரு வீரப்பெண்மணியாக என்னை அடையாளம் காட்ட முடியவில்லை என்றாலும் எத்தனை துன்பங்கள் இன்னல்கள் வந்தாலும் சகித்துக்கொண்டு தேசம் விட்டு தேசம் வந்து வாழமுடியும் என்ற தன்னம்பிக்கையும் மீண்டும் ஒரு நாள் எனது தீவிற்கு செல்வேன் என்ற அந்த துணிவுடனும் எனது பயணம் தொடரும்....
 
இந்த வரிக்களுக்குள் உண்மையான வலிமையும், மறக்கமுடியாத வலியும் இருப்பதை மறக்க முடியமா?