கோவையிடம் படுதோல்வி: என்ன ஆச்சு திருச்சி அணிக்கு?
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே திருச்சி அணி அதிரடியாக விளையாடி வந்ததால் முதல் இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இன்று திருச்சி அணி, கோவையுடன் மோதி படுதோல்வி அடைந்துள்ளது. திருச்சி அணி ரசிகர்கள் தங்கள் அணிக்கு என்ன ஆச்சு என்று வருத்தத்துடன் கேட்டு வருகின்றனர்.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்தது. கோவை அணியின் அபார பந்துவீச்சால் திருச்சி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் அரவிந்த் 35 ரன்களும், பரத் சங்கர் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணி 13.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோவை அணியின் ஷாருக்கான் 67 ரன்கள் எடுத்தார். மேலும் கேப்டன் முகுந்த் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷாருக்கான் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.