ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 30 மே 2018 (11:05 IST)

டிவில்லியர்ஸின் ஓய்வு தென்னாப்பிரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்பு- கிரேம் ஸ்மித்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஏபி டி வில்லியர்ஸ் விலகியது தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய இழப்பு என கிரேம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
 
தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன், விக்கெட் கீப்பர், 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் சமீபத்தில் சர்வதேச கிரக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரது ஓய்வு அறிவிப்பு அனைத்து நாட்டு கிரிக்கெட் வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
 
இதுவரை டிவில்லியர்ஸ் 228 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 25 சதங்கள் உள்பட 9,577 ரன்களும், 114 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள் உள்பட 8,765 ரன்களும், 78 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி 10 அரைசதங்களுடன் 1,672 ரன்களும் குவித்துள்ளார். மேலும், ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் அதிவேக அரை சதம் , 31 பந்துகளில் அதிவேக சதம், 64 பந்துகளில் அதிவேகத்தில் 150 ரன்கள் கடந்து சாதனை படைத்துள்ளார்.
 
இந்நிலையில், ஏபி டிவில்லியர்ஸின் ஓய்வு குறித்து தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் கூறியிருப்பதாவது:-
 
“எனக்கு தெரிந்து டிவில்லியர்ஸ் ஓய்வு குறித்து அதிக அளவில் யோசித்திருப்பார். 2019 உலகக்கோப்பைக்கு பிறகு அவர் ஓய்வு பெற்றிருக்க வேண்டும். அவர் சிறுது காலம் கழித்து தென்னாப்பிரிக்கா மண்ணில் விளையாடிய இந்தியா, ஆஸ்திரேலியா தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரிலும் மிகவும் நன்றாக விளையாடினார். தீடிரென இப்படி ஓய்வு குறித்து அறிவிப்பார் என்று நான் நினைக்கவில்லை. 
 
மக்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். ஏனென்றால் அவர் ஒரு சிறப்பு மிக்க பேட்ஸ்மேன் என்பதால் மக்கள் அவரை இழக்கப் போகிறார்கள். டி வில்லியர்ஸ் இன்னும் அதிக காலம் விளையாட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள். அவரது இழப்பு தென்னாப்பிரிக்கா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்” என்றார்.