தெறியின் விலையை குறைக்க விநியோகஸ்தர்கள் போர்க்கொடி - பரபரப்பான பின்னணி
தெறியின் விலையை குறைக்க விநியோகஸ்தர்கள் போர்க்கொடி - பரபரப்பான பின்னணி
தெறி படத்தின் அனைத்து ஏரியாக்களையும் விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்கினர். ஆனால், செங்கல்பட்டு ஏரியா மட்டும் இன்னும் இழுபறியில் உள்ளது.
செங்கல்பட்டு விநியோகஸ்தர்களுடன் இன்று தெறியின் தயாரிப்பாளர் தாணு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இப்படியொரு பிரச்சனையை விஜய் படம் எதிர்கொள்வது இதுவே முதல்முறை.
விஜய், அஜித், ரஜினி போன்ற மாஸ் நடிகர்களின் படங்களின் மொத்த வசூலில் 80 சதவீதம் முதல்வார வசூலில் கிடைத்துவிடும். டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி திரையரங்குகள் வசூலிப்பதால், படம் வெளியான ஒரே வாரத்தில் மிகப்பெரிய தொகையை எடுத்துவிடுகிறார்கள். இந்த கட்டண கொள்ளையை எதிர்த்து பலரும் வழக்கு தொடர்ந்தனர். சமீபத்தில் இதுபோன்ற ஒரு வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, இந்த கட்டண கொள்ளையை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார். அத்துடன், பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு தொலைபேசி எண்ணையும் அறிவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.
அதன்படி ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் புகார் அளிக்க ஒரு தொலைபேசி எண்ணும் அறிவிக்கப்பட்டது. ஏதாவது திரையரங்கு அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலித்தால் குறிப்பிட்ட போன்நம்பருக்கு போன் செய்தால் போதும், அந்த திரையரங்கு மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.
இந்த கிடுக்கிப்பிடி நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ள விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் தெறியின் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். முன்பு, 50 ரூபாய் டிக்கெட்டை 200, 300 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். அதனால், முதல் மூன்று தினங்களில் 25 நாட்களுக்கான வசூல் திரையரங்குகளுக்கு கிடைக்கும். படம் நன்றாக உள்ளதா இல்லை சுமாரான படமா என்ற விமர்சனம் ரசிகர்களை சென்றடையும் முன்பே திரையரங்குகள் வசூல் அறுவடையை முடித்துவிடும்.
மேலும் அடுத்த பக்கம் பார்க்க.........
இந்த பெரும் கட்டண கொள்ளை காரணமாகவே முன்னணி நடிகர்கள் அவர்களின் வியாபாரத்துக்கு மீறய சம்பளத்தை பெற்று வருகின்றனர். அரசு நிர்ணயித்த கட்டணத்தை திரையரங்குகள் வசூலித்தால் நிலையை சற்று எண்ணிப் பாருங்கள். 300 ரூபாய் கிடைத்த இடத்தில் 50 ரூபாய் மட்டுமே எஞ்சும். ஒரு கோடி வசூல் என்ற இடத்தில் 25 லட்சங்கள் கிடைப்பதே அரிது. இந்த நிலை நீடித்தால் எந்த நடிகரின் படத்தையும் அதிக பணம் கொடுத்து விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் வாங்க முன்வர மாட்டார்கள். நடிகர்களின் அபரிதமான சம்பளமும் கட்டுக்குள் வரும். பொதுமக்களும் பெருவாரியாக திரையரங்குக்கு செல்வார்கள்.
இந்த எளிய நடைமுறையைக்கூட இந்த அரசு இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. அரசு காலாவதியாகும் போது நீதிமன்றத்தின் உத்தரவால் வேறு வழியின்றி அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளது. அதுவும் வெறும் பேச்சாக மட்டும் எஞ்சுமா என்ற அச்சமும் உள்ளது.
அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் திரையரங்குகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே தெறியின் விலையை குறைக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஏரியா விநியோகஸ்தர்கள் கேட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை செங்கல்பட்டு ஏரியா பெரிது. வசூல் அதிகம். சென்னையின் காசி, குரோம்பேட்டை வெற்றி, மடிப்பாக்கம் குமரன் உள்ளிட்ட திரையரங்குகளும் செங்கல்பட்டு லிமிட்டில்தான் வருகின்றன. இந்த இழுபறி காரணமாக இந்தத் திரையரங்குகளில் தெறி வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இன்று நடக்கும் பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டு, படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 14 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.