1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : வெள்ளி, 11 ஜூலை 2014 (13:38 IST)

சினி பாப்கார்ன் - கலைந்தது மோகன்லால், அபிஷே‌க் பச்சனின் பிரேசில் கனவு

கலைந்த கால்பந்து கனவு
 
அமிதாப்பச்சனைப் போலவே அபிஷேக்பச்சனும் கால்பந்து விளையாட்டின் ரசிகர். பிரேசில் விருப்ப டீம். பிரேசில் அரையிறுத்திக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் பிரேசிலுக்கு டிக்கெட் எடுத்தார். அவரைப் போலவே - ஏன் அவரைவிட வெறியர் எனலாம் மோகன்லாலை.
இந்தியாவிலேயே அதிக கால்பந்தாட்ட ரசிகர்கள் உள்ளது கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்திய மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும். அது ஏன் என்பது ஆராயப்பட வேண்டியது. அதேபோல் தரமான சினிமாக்களும் இவ்விரு மாநிலங்களிலிருந்தே தொடர்ச்சியாக வெளியாகின்றன. அதுவும் ஆராய்ச்சிக்குரியதுதான்.
 
மோகன்லால் பிரேசிலுக்கு கிளம்பிய போது ரசிகர்கள் திரண்டு அவரை வழியனுப்பினர். காரணம் இல்லாமலில்லை. மோகன்லாலும் பிரேசில் ப்ரியர். கேரளாவின் முக்கால்வாசி கால்பந்தாட்ட ரசிகர்கள் பிரேசில் ஆதரவாளர்கள் (மீதி அர்ஜென்டினா).
நெய்மர், சில்வா இல்லாத சம்பா அணி சதா அணிதான் ஜெர்மனியுடன் தோற்கும் என நிபுணர்கள் கணித்திருந்தனர். சிலவேளை அது மோசமான தோல்வியாக இருக்கும் என்றும் கூறியிருந்தனர். ஆனால் இப்படியொரு கேவலமான தோல்வியாக அமையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. பிரேசிலின் அதிரடியை நேரடியாக ரசிக்கச் சென்ற மோகன்லாலுக்கும், அபிஷேக்குக்கும் இது பேரிடி. இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா தகுதி பெற்றிருப்பதால் கமான் அர்ஜென்டினா என்று கோஷமிடும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் இருவரும்.

விருதும் வில்லங்கமும்
 
சமீபத்தில் விஜய் தொலைக்காட்சி அளித்த திரைப்பட விருதுகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்கே திரைப்பட விருதுகள் தருவதாக இந்தமுறை பகிரங்கமாக பலரும் குற்றஞ்சாட்டினர். இந்தியாவைப் பொறுத்தவரை திரைப்பட விருதுகள் மட்டுமின்றி அனைத்து விருதுகளுமே அரசியல் கலப்பில்லாமல் வழங்குவதில்லை. கட்சி அரசியலை மட்டும் இங்கே நாம் குறிப்பிடவில்லை.
தொலைக்காட்சிகள் விருது வழங்குவதன் நோக்கம் அதிக திரைக்கலைஞர்கள் விழாவில் இடம்பெறுவார்கள், கலை நிகழ்ச்சி நடத்துவார்கள், அதனை ஏதாவது திருவிழா விடுமுறையில் ஒளிப்பரப்பச் செய்து கணிசமான வருவாயை ஈட்டிக் கொள்ளலாம் என்பதற்காகதான். அதனால் முன்னணி நடிகர்கள், நடிகைகள் தங்களின் விருதுப் பட்டியலில் இடம்பெறுமாறு பார்த்துக் கொள்வார்கள். விஜய், விக்ரம், சூர்யா, கமல் என்று முன்னணி நடிகர்கள் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் இடம்பெறுவதன் ரகசியம் இதுதான். சிறந்த நடிகர் என்ற ஒரேயொரு விருது மட்டும் தந்தால் ஒரேயொரு நடிகரை மட்டுமே திருப்தி செய்ய முடியும். அதற்காகவே பாப்புலர் நடிகர், மக்கள் விரும்பும் நடிகர் என்று பலவித பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறார்கள். இந்த எளிய உண்மை அனைவருக்கும் தெரிந்ததே.

இதுபோன்ற விருது விழாக்களில் குறிப்பிட்ட சில படங்களுக்கு விருது வழங்கும் போது கிளிப்பிஸ்களுக்குப் பதில் படத்தின் ஸ்டில்களை மட்டும் காட்டுவதை கவனித்திருப்பீர்கள். அதற்கு காரணம் சன் பிக்சர்ஸ். சன் பிக்சர்ஸ் எந்தப் படத்தின் திரையரங்கு விநியோக உரிமையை வாங்கினாலும் அல்லது தயாரித்தாலும் அப்படத்தின் ட்ரெய்லர், பாடல் காட்சிகள், காமெடிக் காட்சிகள் என எதையும் பிற தொலைக்காட்சிகளுக்கு தருவதில்லை. அதனால் அந்தப் படங்களின் கிளிப்பிங்ஸ்கள் பிற தொலைக்காட்சிகள்வசம் இருப்பதில்லை. அதனாலேயே அப்படத்தின் ஸ்டில்களை மட்டும் காட்டுகிறார்கள். மற்றவர்களின் படங்களின் காட்சிகளை ஒளிப்பரப்பி சம்பாதிக்கும் சன் தொலைக்காட்சி சன் பிக்சர்ஸ் தயாரிக்கும், விநியோகிக்கும் படங்களின் காட்சிகளை தன்னைத்தவிர வேறு யாரும் ஒளிப்பரப்ப அனுமதிப்பதில்லை. இந்த சுயநலத்தை சன் குழுமம் எப்போதுமே கடைபிடித்து வந்தள்ளது. அதேபோல் தான் தயாரிக்கும், விநியோகிக்கும் படங்களை மட்டுமே டாப் 10 தரவரிசையில் முதன்மைப்படுத்தி வந்ததையும் தமிழகம் அறியும்.
 
அதையேதான் விஜய் தொலைக்காட்சியும் திரைப்பட விருதுகளில் கடைப்பிடித்து வருகிறது. தான் ஒளிப்பரப்பு உரிமை வாங்கி வைத்திருக்கும் படங்களுக்கு அதிக விருதுகள் தருவதை ஒரு கொள்கையாகவே அது வைத்துள்ளது. இந்த எளிய உண்மைகள் சாதாரண ரசிகர்களுக்கும் தெரியும்.
 
வியாபாரத்தை பிரதான நோக்கமாகக் கொண்டு திரைப்பட விருதுகள் தரப்படுவதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படியான விழாவில் எனக்கு ஏன் அங்கீகாரம் தரவில்லை என்று ராம் போன்றவர்கள் கோஷமிட்டு சம்பந்தப்பட்ட விருதை தாங்கள் அறியாமலே சிறப்பிக்கும் போக்குதான் புரியவில்லை. தங்கமீன்கள் வெளியானதிலிருந்து கேட்கிறது ராமின் இந்த அங்கீகாரக்குரல். ஆனந்த விகடன் குறைவான மதிப்பெண் தந்தது என அதன் அலுவலகத்துக்கே சென்று விமர்சனத்தை மாற்றி எழுதும்படி கேட்டிருக்கிறார். அதுபற்றி பெரிய விவாதத்தையே அன்று இணைய வெளியில் அவர் உருவாக்கினார். பிறகு தமிழ் இந்து படத்தை சுமாராக விமர்சித்ததை கண்டித்து, பெரியார் இந்து பத்திரிகை குறித்து சொன்னதையெல்லாம் குறிப்பிட்டு அதையும் விவாதப் பொருளாக்கினார். இதேபோல் பல நிகழ்வுகள், சர்ச்சைகள். ஒரு படத்தை எடுத்துவிட்டு அதன் அங்கீகாரத்துக்காக இப்படி தொடர்ந்து குரல் கொடுக்கும் ஒரே இயக்குனர் உலகிலேயே இவர் ஒருவராகதான் இருப்பார். இப்போது தேசிய விருது கிடைத்தப் பாடலுக்கு, குழந்தை நட்சத்திரத்துக்கு விஜய் விருது இல்லையா என்று மேடையிலேயே கேட்டு சர்ச்சையாக்கியுள்ளார்.

விஜய் விருது என்பதே வியாபாரத்தை நோக்கமாகக் கொண்டு சந்தர்ப்பவாதமாக அளிப்பது. அங்கு போய் எனக்கு அங்கீகாரம் இல்லையா என்பது அறியாமையா? இல்லை ராம் போன்றவர்கள் விரும்புவது இந்த சந்தர்ப்பவாத விருதுகளையா?
 
சிறந்த படங்களை தந்த பாலுமகேந்திரா, மகேந்திரன், அடூர் கோபால கிருஷ்ணன், அரவிந்தன், கிரிஷ் காசரவள்ளி போன்றவர்கள் இப்படியொரு சந்தர்ப்பவாத விருது கிடைக்கவில்லையே என்று ஒருபோதும் புலம்பியதில்லை. அவர்களைப் பொறுத்தவரை அந்த விருதுகள் தங்கள் படங்களுக்கு கிடைக்காமல் இருப்பதே கௌரவம். பலமுறை சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை அடூர் கோபால கிருஷ்ணன் பெற்றுள்ளார். அவரது பல படங்கள் தேசிய அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒரு படம்கூட இதுவரை இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டதில்லை. இதை ஒரு ஆதங்கமாக அடூரின் படங்களுக்கு கலை இயக்குனராக பணிபுரிந்த ராஜசேகரனிடம் சொன்ன போது, பதறிப் போனார். ஆஸ்கர் மாதிரி ஒரு விருதுக்கு படத்தை அனுப்பாமலிருக்கிறதே நல்லது என்றார். 
 
ராமுக்கு தேவை இப்போது விஜய் விருது இல்லை. இந்த மனப்பக்குவம்.
 
கண் தெரியாத உண்மைகள்
 
சமீபத்தில் நமது உதவி இயக்குனர் நண்பர் ஒருவர் கண் தெரியாதவர்கள் படிக்கும் பள்ளிக்கு சென்றார். அவர் பணிபுரியும் படத்தின் ஹீரோயின் அறிமுகக் காட்சியில் சாலையில் தட்டுத் தடுமாறி வரும் கண் தெரியாத சிறுமியை வண்டியில் அடிபடாமல் ஹீரோயின் காப்பாற்றுகிறார். இந்தக் காட்சிக்கு ஒரு கண் தெரியாத சிறுமி வேண்டும். பள்ளி நிர்வாகியிடம் நண்பர் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அதற்கு அவர், ஏம்பா இதுவரை கண் தெரியாத யாராவது வண்டியில் அடிபட்டு இறந்ததா கேள்விப்பட்டிருக்கிற? என்று கேட்டுள்ளார். நண்பர் யோசித்துப் பார்த்தால், செய்தித்தாள்களில் தினம் யாராவது விபத்தில் சாகும் செய்தி வருகிறது. ஆனால் கண் தெரியாத ஒருவர் இறந்ததாக இதுவரை படித்ததோ கேள்விப்பட்டதோ இல்லை. கண் தெரியாதவங்க தன்னைச் சுற்றி என்ன நடக்குதுன்னு ரொம்ப கவனமா இருப்பாங்க. ரோட்டில் அவங்களை மாதிரி எச்சரிக்கையுடன் மத்தவங்க நடக்கிறதில்லை. எதுனா சீன் வைக்கிறதா இருந்தா இனியாவது கொஞ்சம் நேர்மையா வைங்கப்பா என்று சொல்லி ஒரு சிறுமியை அனுப்பி வைத்துள்ளார் அந்த நிர்வாகி.
 
கரெக்ட்தான் இல்லையா?