விளம்பரங்களில் நடித்த நடிகர்களின் மீது வழக்கு - அரசு நடவடிக்கை சரியா?

ஜே.பி.ஆர்.| Last Updated: திங்கள், 1 ஜூன் 2015 (10:20 IST)
நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸை உத்தர பிரதேச அரசு அம்மாநிலத்தில் தடை செய்துள்ளது. மேகி நூடுல்ஸில் சோடியம் குளூடாமெட் என்ற ரசாயன உப்பு அனுமதிக்கப்பட்ட அளவைவிட 17 மடங்கு அதிக அளவில் இருப்பதை அம்மாநில உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்ததைத் தொடர்ந்து இந்தத் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், நெஸ்லே இந்தியா உள்பட 5 நிறுவனங்களின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்த அமிதாப்பச்சன், மாதுரி தீட்ஷித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருளின் விளம்பரப் படத்தில் நடித்ததுடன், அது உடலுக்கு நல்லது என்று பிரச்சாரம் செய்தனர் என வழக்கு தொடர்பான மனுவில் உத்திரபிரதேச அரசின் மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
 
பணத்துக்காக சினிமா நட்சத்திரங்கள் தரமற்ற பொருள்களின் விளம்பரங்களில் நடிக்கின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது சரியே என்று சிலர் இந்த நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். நட்சத்திரங்களின் சமூக பொறுப்பு குறித்து விவாதிக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், சட்டபூர்வமான நடவடிக்கை சரியா என்பதுதான் கேள்வி.
 
மக்களின் உணவாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு தினந்தோறும் லட்சக்கணக்கானவர்களால் வாங்கிச் சாப்பிடும் ஒரு பொருளின் விளம்பரத்தில்தான் நடிகர்கள் நடிக்கின்றனர். அந்தப் பொருள் உடல்நலத்துக்கு தீங்கானதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்களுடையது அல்ல. அரசினுடையது. எந்தப் பொருள் சந்தைப்படுத்தப்பட்டாலும் அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து அது பயன்படுத்தக் கூடியதா இல்லை தவிர்க்கப்பட வேண்டியதா என்பதை தீர்மானிக்க, நடவடிக்கை எடுக்க அரசின் கீழ் பல துறைகள் செயல்படுகின்றன. மேகி போன்ற ஒரு விஷத்தை வருடக்கணக்காக விற்பனை செய்ய அந்தத் துறைகள் எப்படி அனுமதித்தன? 
 
அரசால் தடை செய்யப்பட்ட ஒரு பொருளின் விளம்பரத்தில் ஒருவர் நடித்தால் அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கலாம். அரசு விற்பனைக்கு அனுமதித்திருக்கும் பொருளை விளம்பரப்படுத்தியதற்காக ஒருவர் மீது வழக்கு தொடர்வதும் அவரை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதும் தவறான நடவடிக்கை. 
 
ஃபேர் அண்ட் லவ்லி போன்ற அழகு க்ரீம்களால் இன்றுவரை யாரும் சிவப்பாக மாறியதில்லை. ஆனால், வருடக்கணக்காக இதே பொய்யைச் சொல்லி அவர்கள் தங்கள் பொருள்களை சந்தைப்படுத்துகின்றனர். சிவப்பே அழகு, கறுப்பு அவமானம் என்று தங்களின் விளம்பரங்களின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சட்டத்துக்குப் புறம்பான இந்த விளம்பரங்களை எந்த அரசும் கண்டு கொள்ளவில்லை. பெப்சி போன்ற குளிர்பானங்களில் பூச்சிக் கொல்லி மருந்தின் அளவு அதிகமிருப்பதை சுட்டிக் காட்டிய பிறகும் அவை சந்தையில் தாராளமாக வாங்கக் கிடைக்கின்றன. அவற்றிற்கு எந்தத் தடையும் இல்லை.


இதில் மேலும் படிக்கவும் :