செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (12:47 IST)

யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்

யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது.


கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு எதிராக போராடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை போரிடுவதற்காக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டிருப்பதாக, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று, பாதுகாப்புக் கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்தும் வான்வழி தாக்குதல்கள் இன்னும் பல பொதுமக்கள் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

2015 ஆம் ஆண்டு கிளர்ச்சியாளர்கள் மற்றும் யேமன் அரசுக்கு இடையே உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து பத்தாயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கில் பெரியவர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்து பஞ்சத்தின் விளிம்பில் உள்ளனர்.

இந்த 300 பக்க அறிக்கையில், 2020 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் ஈடுபடுத்தப்பட்ட 1,406 குழந்தைகளின் பட்டியலையும், அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் 562 குழந்தைகளின் பட்டியலையும் பெற்றதாக, அக்குழு கூறியுள்ளது.

"ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் முழக்கமான 'அமெரிக்காவுக்கு மரணம், இஸ்ரேலுக்கு மரணம், யூதர்களை சபிக்கவும், இஸ்லாத்திற்கு வெற்றி' என்ற முழக்கத்தை முழங்க அக்குழந்தைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என, 4 உறுப்பினர்கள் அடங்கிய அக்குழுவின் நிபுணர்கள் கூறியதாக, ஏபி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

"ஒரு முகாமில் 7 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆயுதங்களை சுத்தம் செய்யவும், ராக்கெட்டுகளை தவிர்க்கவும் கற்றுக்கொடுக்கப்பட்டது" என அவர்கள் தெரிவித்தனர்.

"பள்ளிகள், கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகளைப் பயன்படுத்தி குழந்தைகளை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்" என அக்குழு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தது மற்றும் அவ்வாறு செய்யாதவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அக்குழு பரிந்துரைத்தது.

தலைநகர் சனாவை கட்டுப்படுத்தும் கிளர்ச்சியாளர்கள், ஐநா ஆயுதத் தடையை மீறுவதற்கு, தங்கள் ஆயுத அமைப்புகளுக்கான முக்கியமான கூறுகளை ஆதாரமாகக் கொள்ள, உலகளாவிய இடைத்தரகர்களின் சிக்கலான வலையமைப்பைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தலைநகர் சனாவை தளமாகக் கொண்ட அதிகாரிகளுக்கு விசுவாசமான அனைத்து ராணுவ மற்றும் துணை ராணுவப் படைகளும் இந்த வரையறையின் கீழ் வருகின்றன," எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் நட்பு நாடான ஐக்கிய அரபு அமீரகம் மீது ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, போர் தீவிரமடைந்துள்ளது.

ஜனவரி 21 அன்று ஹூத்தியின் வடமேற்கு கோட்டையான சாடாவில் உள்ள தடுப்பு மையத்தின் மீது வான் வழித் தாக்குதல்களில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஐநா மற்றும் அமெரிக்கா இத்தீவிரத்தை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்தன.