1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

நலம் தரும் வரலட்சுமி விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது...?

வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள்.
வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி,  சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.
 
இந்த விரத வழிபாடு எவ்வாறு உருவானது என்பது குறித்து பல கதைகள் கூறப்படுகிறது, ஆனால் ரத்தின சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் நித்திய  சுமங்கலியான மகாலட்சுமி பொறுமையே வடிவானவள், கணவரின் இதயத்தில் குடியிருக்கும் இவள், பெண்களை துன்பங்களில் இருந்து காப்பவள். அவ்வாறு பெண்களை காப்பதற்காகவே, இந்த வரலட்சுமி விரதத்தன்று தன்னை வழிபடும் பெண்களின் வீட்டிற்கு சென்று குடிகொள்கிறாள்.
 
முன்பு ஒருமுறை மகத ராஜ்யம், குணதினபுரம் என்ற நகரத்தில் வசித்து வந்து சாருமதி என்ற பெண், தனது கணவன் மற்றும் குடும்பத்தினரை அன்போடு கவனித்து வந்தாள், அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியை அளித்தது. மகாலட்சுமி சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள்புரிந்தார்.  ‘என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களின் இல்லத்தில் நான் வசிப்பேன்’ என்று அருளிய மகாலட்சுமி, சாருமதிக்கு வரலட்சுமி நோன்பு  இருப்பதன் வழிமுறையைக் கூறி, அதை மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதன்படியே, ஒவ்வொரு பெண்களும் தங்களது வீட்டில்  வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்க ஆரம்பித்தனர்.
 
வரலட்சுமி விரதத்தை ஆடி அல்லது ஆவணி மாதம் பவுர்ணமிக்கு முன் வருகிற வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். இந்நாளில் பூஜை அறையை  சுத்தம் செய்து வரலட்சுமியின் புகைப்படத்தை வைத்து, அதன் முன்னர், ஒரு வாழை இலைபோட்டு அதில் பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது  தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் ஆகிய வற்றை வைத்து, லட்சுமிக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும்.
 
ஒரு கலசத்தை எடுத்து அதன்மேல் முழுத்தேங்காயை வைக்க வேண்டும். கலசத்தை சுற்றி மஞ்சள் நிறக்கயிற்றை இணைத்துக் கட்ட வேண்டும். தேங்காயின் மேல் குங்குமம் இட வேண்டும். அதை அரிசியின் நடுவில் வைக்க வேண்டும். அதன்பின்னர், முதற்கடவுளான விநாயகருக்கு பூஜை செய்துவிட்டு, வரலட்சுமிக்கு  தேவாரம் பாடி, அஷ்ட லட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை இலையின் மீது தூவி பூஜை செய்து தூப தீபங்கள் காட்ட வேண்டும்.
 
அன்னம், பாயாசம், பழ வகைகள், நிவேதனம் செய்ய வேண்டும். ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும். பின்னர் வரலட்சுமியின் முன் வைத்திருந்த  நோன்புச் சரட்டை மஞ்சள் குங்குமம் இட்ட மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜையின் போது அஷ்ட லட்சுமி ஸ்தோத்திரம்,  கனகதாரா ஸ்தோத்திரம், மகா லட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்க வேண்டும். பின் கலசத்தை அரிசி பாத்திரத்திற்குள் வைப்பது விசேஷம்.
 
வரலட்சுமி விரதம் கடைப்பிடிப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தைகளுக்கு கல்வி  ஞானம் கிட்டும். வரலட்சுமியின் அருளால் விரும்பிய நலன்கள் அனைத்தும் கிடைத்து வாழ்க்கை வளமாகும்.