செவ்வாய்க்கும் முருக பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உள்ளது ஏன்...?
செவ்வாய்க்கிழமை சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து, உடல் தூய்மை பெற நீராடி திருநீற்றை நீரில் குழைத்து முறைப்படி தலை உச்சி முதல் உடல் எங்கும் தரித்துக்கொண்டு விநாயகரை நினைத்து துதிசெய்து வணங்க வேண்டும். பின்பு ஸ்ரீ பஞ்சாட்ச மந்திரத்தை 108 முறை ஜெபித்து சிவத்தியானம் செய்தல் வேண்டும்.
செவ்வாய்க்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு. எல்லா கிரகங்களுக்குமே அதிதேவதை, பிரத்யதி தேவதை என தேவதைகள் சில உண்டு. அதன்படி செவ்வாய்க்கு அதிதேவதை பூமிதேவி ஆவார்.
செவ்வாய்க்கு பிரத்யதி தேவதை கந்தப்பெருமான் ஆவார். செவ்வாய்க்கும் முருகனுக்கும் மட்டுமல்ல, செவ்வாய்க்கும் பூமிக்கும் கூட தொடர்புகள் உண்டு. புராணக்கதைகளின்படி செவ்வாய் பூமியின் மகன். அதுமட்டுமல்ல முன் பேரழிவுகள் ஏற்பட்ட சமயத்தில், பூமி உருண்டையின் செம்மண் நிலப்பரப்பிலிருந்து உடைந்து சிதறி விழுந்த ஒரு செம்மண் உருண்டையே செவ்வாய் என்பது அறிஞர்களின் கருத்து.
அதனால்தான் பூமியிலிருந்து உடைந்து உருவான செவ்வாய்க்கு பௌமன், பூமிபுத்ரன் என்ற பெயர்கள் உண்டானதென்பர். செம்மண் நிலப்பரப்புடைய கிரகம் என்பதால் தான் செவ்வாய் என்ற பெயரும், ஆலய வழிபாட்டில் அவருக்கு சிவப்பு வர்ணத்துணியும், சிவப்பு மலர்களும், சிவப்பு நிற துவரையும் சமர்ப்பணம் செய்கிறோம்.