சோமவார விரதத்தை எப்போது எவ்வாறு தொடங்குவது...?
சோமவார விரதத்தை கார்த்திகை மாதம் முதல் திங்கட்கிழமையில் தொடங்கி ஆண்டு முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சித்திரை, வைகாசி, ஆவணி, மார்கழி முதலான மாதங்களில் வரும் முதல் திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து கடைப்பிடிக்கலாம்.
ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் கணபதியை வழிபட வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அதற்கு தேங்காய் உடைத்து கற்பூர தீபம் காட்டவேண்டும். பின்னர் கும்பம் தயார் செய்ய வேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி போன்றவற்றை போட்டு, கலசத்துக்கு மேல் பகுதியில் மாவிலையை வைக்க வேண்டும்.
கலசத்தின் மையப் பகுதியில் மஞ்சள் தடவி, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்ய வேண்டும். அதன்பிறகே பூஜையைத் தொடங்க வேண்டும். சாதம், நெய், பருப்பு, பாயாசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். வழிபாட்டின் போது சிவ நாமத்தை உச்சரிப்பது சிறப்பான வாழ்வை அருளும். வழிபாட்டின் முடிவில் இறைவனுக்கு தீபாராதனை காட்ட வேண்டும்.
பூஜை முடிந்த பின்னர் வயதான தம்பதியரை பார்வதி பரமேஸ்வரனாக மனதில் நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு புதுவேட்டி, ரவிக்கைதுணி, வெற்றிலைப்பாக்கு மற்றும் பழம் இவற்றுடன் தட்சனை ஆகியவை அடங்கிய தட்டை கொடுக்க வேண்டும். அவர்களுக்கு அன்னதானம் செய்து அந்த அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெறவேண்டும்.
இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருப்பது நல்லது. அப்படி இருக்க முடியாதவர்கள் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டு விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
இந்த விரதத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது 12 ஆண்டுகளோ கடைப்பிடிக்கலாம். அதுவும் இயலாதவர்கள் கார்த்திகை மாதத்தில் மட்டுமாவது இந்த விரதத்தை அனுஷ்டிப்பது நலம் தரும்.