வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ஆஷாட நவராத்திரியில் செய்யவேண்டிய பூஜைகள் என்ன...?

ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும். 
 

ஆனி, ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது  விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும், விவசாயம் செழிக்க வளம் பெருக  அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். 
 
இந்த காலத்தில் அம்பிகையை, விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.
 
வாராஹி வழிபாடு வார்த்தாலி என்று அழைக்கப்படக்கூடிய வராஹி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய  சக்தி கொண்டவள். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை உடனடியாக அருளுபவள். வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராகவும்,  வராஹ புராணத்திலும், ஸ்ரீ நகர உபாஸனையிலும் அஷ்டமாத்ருகா தேவதைகளில் ஒருவராகவும் வணங்கப் படுகின்ற தெய்வம். 
 
வளம் தரும் வாராஹி வாழ்வில் ஏற்படக்கூடிய எதிர்ப்புகளை நீக்குபவள். விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக்  கூடியவள்.