வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலத்தின் சிறப்புக்கள் என்ன...?

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். 

சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க மகா சிவராத்திரி ஆகும்.
 
சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.
 
லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.
 
மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள "இருநிலனாய் தீயாகி" எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.