தெய்வங்கள் நம் உடலில் என்னவாக இருக்கிறார்கள்...?
நம் உடல் சிவனார். உடலின் வலிமை, உடலின் வெப்பம், உடலில் உள்ள வாயு சார்ந்த சக்திகள் எல்லாம் உமையவள். அதனால்தான் அவளை சக்தி என்றும் நாம் அழைக்கிறோம்.
பிள்ளையார் செயலின் வடிவம் என்பதால், நம் உடலின் இயக்கங்கள் யாவும் அவரே ஆகிறார். உ-ம் இதயத் துடிப்பு. மஹா விஷ்ணு உயிர். உயிருக்கும் மஹா விஷ்ணுவிற்கும் இடையிலான ஒற்றுமைகள். விஷ்ணு காக்கும் கடவுளாக அறியப்படுகிறார். உயிர் உடலில் இருக்கும் வரை உடல் அழுகாது. உயிர் பிரிந்தவுடன் அழுக ஆரம்பிக்கிறது.
விஷ்ணு பல்வேறு அவதாரங்கள் எடுக்கக்கூடியவர். உயிரும் அப்படித் தான் புல்லாக, பூடாய், புழுவாய், மரம், செடி, கொடிகளாய், எத்தனை எத்தனையோ வடிவம் தாங்கியிருக்கிறது. விஷ்ணு வாமனனாகவும் பொடி நடை போடுவார். திருவிக்ரமனாகவும் வானளப்பார். உயிரும் அப்படித் தான் சிறு எறும்பாகவும் தன்னை வெளிப்படுத்துகிறது. பெரிய யானையாகவும் உருவம் கொள்கிறது.
விஷ்ணுவின் தங்கை மலைமகள். இது எதை உணர்த்துகிறது என்றால் உயிரும் உடலின் மற்ற சக்திகளும் அண்ணன் தங்கை போன்றவை. அதாவது உயிரும் உடலின் பிற சக்திகளும் ஓரே குணம் உடையது ஆனால் ஒன்றல்ல. மற்ற சக்திகளை அளக்கலாம் ஆனால் உயிரை அளக்க முடியாது. மற்ற சக்திகளின் தன்மைகளை விளக்கலாம் ஆனால் உயிரின் தன்மைகளை விளக்க முடியாது. மரணத்தின் போது உயிர் உடலை விட்டு செல்லும், பிற சக்திகள் செல்லாது. உடலுக்கும் அந்தச் சக்திகளுக்குமான திருமணபந்தம் அது தான்.
பிரம்ம தேவன் மனம். மனம் ஒயாமல் எதாவது சிந்தனைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. பிரம்ம தேவனும் அப்படித் தான் இடைவிடாமல் கோடிகணக்கான ஜீவராசிகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். மனம் ரஜோ குணமுடையது. பிரம்ம தேவனும் ரஜோ குணம் உடையவராகவே அறியப்படுகிறார்.
இப்படியாக ஒவ்வொரு தெய்வமும் நம்மோடு நம் உடலிலேயே இருக்கிறார்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறானவர்கள் அல்ல. ஓன்றே இரண்டானது, பின் அதுவே பலவானது. ஆகையால் இவர்களுள் உயர்வு தாழ்வு காண்பது தவறு.