கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணனின் அருளை பெற செய்யவேண்டியவைகள் !!
கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நமக்கு நினைவுக்கு வருபவை பட்ஷணங்கள்தான். முறுக்கு, சீடை, அதிரசம் என்று பலகாரங்கள் பலவும் செய்து கிருஷ்ணனுக்கு சமர்ப்பிக்கும் வழக்கம் உண்டு.
ஆனால், இது எல்லோருக்கும் சாத்தியமானவை அல்ல. இவை எல்லாம் இருந்தால்தான் கிருஷ்ணன் அருள் கிடைக்கும் என்றும் இல்லை. கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமான இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்று இருந்தாலே அவனின் அருளைப் பெற்றுவிடலாம்.
ஒன்று குசேலர் கொண்டு சென்றது, மற்றொன்று கோபிகைகளின் இல்லம் புகுந்து அவரே திருடி உண்டது. கிருஷ்ணனுக்கு அவல் போல விசேஷமான நிவேதனம் வேறு இல்லை. சுதாமா கட்டிக் கொண்டுவந்த கொஞ்சம் அவலை அன்போடு ஏற்றுக்கொண்டு கிருஷ்ணர் அவருக்கு அளித்த செல்வங்கள் ஏராளம்.
செல்வ வளம் வேண்டுபவர்கள், வறுமையிலிருந்து விடுபட விரும்புகிறவர்கள் கிருஷ்ணனுக்குக் கொஞ்சமாக அவல் நிவேதனம் செய்தாலே போதுமானது. சாதாரண அவல் தந்து வேண்டுவனவற்றைச் சாதித்துக் கொள்ளலாம்.
மற்றொரு நிவேதனம் நவநீதம். கோபிகைகள் கண்ணன் வந்து தங்கள் வீட்டுக்கு வந்து வெண்ணெய் உண்ண மாட்டானா என்று ஏங்குவார்களாம். வெண்ணெய் என்பது தயிரிலிருந்து பிரிந்து தயாராவது.
இந்த உலக இன்பங்களிலிருந்து பிரிந்து உயர்ந்த பக்குவமான நிலையை அடைவதுவே வெண்ணெய்யின் குறியீடு. அத்தகைய வெண்ணெயைக் கண்ணனுக்கு சமர்ப்பித்தால் நமக்குப் பிறவித் துன்பம் இல்லாமல் வைகுண்டப் பேற்றினை அருள்வான் என்பது ஐதிகம். எனவே, இந்த இரண்டு நிவேதனங்களில் ஏதேனும் ஒன்றைப் படைத்து கண்ணனை வரவேற்கலாம்.