ரிஷபம்: ராகு, கேது பெயர்ச்சிப் பலன்கள்

லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 26 டிசம்பர் 2015 (15:30 IST)
நாட்டு நடப்பை நன்கு அறிந்தவர்களே! உங்களுக்கு 08.01.2016 முதல் 25.07.2017 வரை உள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தில் அமர்ந்து அடுக்கடுக்கான பிரச்னைகளையும், வீண் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் தந்துக் கொண்டிருந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு நான்காவது வீட்டில் வந்தமர்கிறார். ஐந்தாம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் எத்தனையோ மருத்துவரை அணுகி மருந்து, மாத்திரை உட்கொண்டும் வீட்டில் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என ஏங்கித் தவித்தவர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும்.
இனி குடும்ப சூழ்நிலையறிந்துப் பொறுப்பாக நடந்துக் கொள்ளத் தொடங்குவார்கள். மகன் கூடாப்பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுவார். அவருக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அதிக சம்பளத்துடன் புது வேலைக் கிடைக்கும். மகளுக்காக வரன் தேடி அலைந்தீர்களே! உங்களின் எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் நல்ல குடும்பத்திலிருந்து மணமகன் அமைவார். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
பூர்வீக சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தாம்பத்யம் இனிக்கும். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் புரிந்துக் கொள்வார்கள். நட்பு வட்டம் விரிவடையும். என்றாலும் ராகு 4-ம் வீட்டில் அமர்வதால் தாயாருக்கு இரத்த அழுத்தம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வரக்கூடும். வீட்டில் கழிவு நீர் மற்றும் குடி நீர் குழாய் அடைப்பு ஏற்படக்கூடும்.
அரசாங்க அனுமதியின்றி வீடு கட்டத் தொடங்க வேண்டாம். வாகனத்தில் செல்லும் போது ஆர்.சி.புக், லைசன்சை மறக்காதீர்கள். சின்ன சின்ன அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகும். சொந்த வாகனத்தில் இரவு நேரத்தில் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும். சொத்துக்குரிய ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிராளி அடிக்கடி வாய்தா வாங்குவதால் வழக்கில் தீர்ப்புத் தள்ளிப் போகும்.
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:0

உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் முதல் பாதத்தில் 08.01.2016 முதல் 10.03.2016 வரை ராகுபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோரின் உடல் நலம் சீராகும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வீட்டில் கூடுதல் அறை அமைப்பது, தளம் கட்டுவது போன்ற முயற்சிகள் சாதகமாக முடியும்.
ராகுபகவான் உங்கள் ராசிநாதனும்-சஷ்டமாதிபதியுமான சுக்ரனின் பூரம் நட்சத்திரத்தில் 11.03.2016 முதல் 15.11.2016 வரை செல்வதால் சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். பணப்பற்றாக்குறை விலகும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். வெளிவட்டாரம் சிறப்பாக இருக்கும். என்றாலும் தொண்டை வலி, சளித் தொந்தரவு, தோலில் நமைச்சல் வந்துச் செல்லும்.
கேதுவின் மகம் நட்சத்திரத்தில் 16.11.2016 முதல் 25.7.2017 ராகுபகவான் செல்வதால் மன இறுக்கம், காரியத் தடங்கல், வீண் சச்சரவு, இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல், தோலில் நமைச்சல், எதிர்பாராத பயணங்கள் வந்துச் செல்லும். சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். மற்றவர்களிடம் எந்தப் பொறுப்புகளையும் ஒப்படைக்காதீர்கள். நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.
கன்னிப்பெண்களே! பெற்றோரின் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளுங்கள். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். பழைய நண்பர்களை புறக்கணிக்க வேண்டாம். கல்யாண விஷயத்தை பெற்றோரிடம் விட்டுவிடுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.

மாணவ-மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். டி.வி. பார்க்கும் நேரத்தை குறைப்பது நல்லது. கூடாப்பழக்க வழக்கமுள்ள நண்பர்களிடம் சிக்கிக் கொள்ளாதீர்கள். வகுப்பறையில் அரட்டை பேச்சை தவிர்த்து விட்டு பாடத்தில் கவனம் செலுத்துங்கள். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.
அரசியல்வாதிகளே! எதிர்கட்சிக்காரர்களிடம் உங்கள் கட்சி விஷயங்களை பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது. வழக்கில் சிக்கி கொள்ளாதீர்கள்.

கலைத்துறையினரே! உங்களை விட வயதில் குறைந்த கலைஞர்களால் நல்லது நடக்கும். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமைக் கொண்டாடுவார்கள்.
விவசாயிகளே! சொத்துப் பிரச்சனைகளை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு மகசூலை அதிகப்படுத்த முயற்சி எடுங்கள். எலித்தொல்லை, பூச்சித் தொல்லைகள் வரக்கூடும். வற்றிய கிணறு சுரக்கும். தென்னை, வாழை, சவுக்கு வகைகளால் லாபமடைவீர்கள்.

வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். போட்டிகளை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். தொடர்ந்து லாபம் பெற முடியவில்லையே என்ற ஒரு கவலைகளும் இருக்கும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள் விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்.
சந்தை நிலவரங்களை தெரிந்துக் கொண்டு புது முயற்சிகளோ, முடிவுகளோ செய்யப்பாருங்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். திடீரென்று அறிமுகமாகி கொஞ்ச காலம் பழகியவர்களை பங்குதாரர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

உத்யோகத்தில் உங்களைப் பாரபட்சமாக நடத்திய அதிகாரி வேறு இடத்திற்கு மாறுவார். புது அதிகாரியால் மதிக்கப்படுவீர்கள். உங்களை நம்பி ரகசியப் பொறுப்புகளை ஒப்படைக்குமளவிற்கு மூத்த அதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளம் உயரும். சக ஊழியர்களால் சின்ன சின்ன பிரச்னைகள் தலைத்தூக்கினாலும் சாதுர்யமாகப் பேசி சரி செய்வீர்கள். வேறு சில வாய்ப்புகளும் தேடி வரும்.
கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினோராவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு காரிய வெற்றியையும், பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்று தந்த கேது பகவான் இப்போது பத்தாவது வீட்டில் வந்தமர்வதால் வேலைச்சுமை அதிகமாகும். ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். ஒற்றையாக இருந்து எவ்வளவு தான் போராடுவது, எத்தனைக் காலத்திற்கு தான் இப்படி கஷ்டப்படுவது என்ற ஒரு ஆதங்கமும் அவ்வப்போது வெளிப்படும்.
உங்களுடைய திறமைகளை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் போகும். கௌரவக் குறைவான சம்பவங்களோ அல்லது தலைக்குனிவான சம்பவங்களோ நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சம் வந்துப் போகும். உங்களுக்கு எதிரானவர்களில் சிலர் தங்களின் ஆதாயத்திற்காக உங்களைப் பற்றி தவறான வதந்திகளை பரப்புவார்கள்.
யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். ரோட்டரி கிளப், ட்ரஸ்டு போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் இணைந்து பொது சேவைகளில் ஈடுபடுவீர்கள். மாற்றுமொழியினரால் உதவிகள் உண்டு. மேற்கொண்டு உங்களுடைய கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்வீர்கள். மறைமுகமாக செயல்பட்டவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் அஷ்டம-லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 08.01.2016 முதல் 12.07.2016 வரை கேதுபகவான் செல்வதால் சில நேரங்களில் வெறுமையை உணருவீர்கள். ஒருவித பதட்டம், பயம் அடிமனதிலே தோன்றி மறையும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வி.ஐ.பிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். கோபத்தை கட்டுப்படுத்தப்பாருங்கள். எடுத்தோம், கவிழ்தோம் என்றெல்லாம் அவசரப்பட்டு பேசி விட்டு பிறகு அவஸ்தை படாதீர்கள். தங்க ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள்.
ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் 13.07.2016 முதல் 20.03.2017 வரை கேதுபகவான் செல்வதால் மற்றவர்களுடன் உங்களை ஒப்பீட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்களுடைய தனித்தன்மையைப் பின்பற்றுவது நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன சலசலப்புகள் வரும். வேலைச்சுமையால் டென்ஷன் அதிகமாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்கள் ஏமாற்றுவதாக நினைத்துப் புலம்புவீர்கள்.
உங்கள் சப்தம-விரையாதிபதியான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரத்தில் 21.03.2017 முதல் 25.07.2017 வரை கேதுபகவான் செல்வதால் சகோதரங்களால் பண உதவிகள், பொருளுதவிகள் உண்டு. கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். மனைவியின் ஆரோக்யம் சீராகும். என்றாலும் திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். கனவுத் தொல்லையால் அவ்வப்போது தூக்கம் குறையும். புகழ் பெற்ற அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். உத்யோக ஸ்தானமான 10-ம் வீட்டில் கேது அமர்வதால் உத்யோகத்தில் கூடுதல் நேரம் ஒதுக்கி வேலை பார்த்தாலும் நிர்வாகத்திடமிருந்து பாராட்டோ, அங்கீகாரமோ கிடைக்கவில்லையேயென ஆதங்கப்படுவீர்கள்.
அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளை தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். அலுவலகத்தில் ஒதுக்கப்படுகிறோமோ என்ற ஒரு சந்தேகம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டேயிருக்கும்.
இந்த ராகு-கேது மாற்றம் கட்டுக்கடங்காத செலவுகளையும், கடினமாக உழைக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளினாலும், மற்றொரு பக்கம் ஓரளவு நிம்மதியையும், மகிழச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்

திருவாரூர்-நாகை பாதையிலுள்ள கீழ்வேளூருக்கு 3 கி.மீ, தொலைவில் உள்ள திருக்கண்ணங்குடி எனும் ஊரில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கும் ஸ்ரீகாளத்தீஸ்வரரை ஏதேனும் ஒரு திரயோதசி திதி நாளில் சென்று வணங்குங்கள். மூடை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள்.


இதில் மேலும் படிக்கவும் :