1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகளும் பலன்களும் !!

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான்  சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும்,  பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்யவேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது.

ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை  6 மணிக்கு மேல் தொடங்கும்.
 
இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து, 
 
த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்
 
என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப  ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு  வாய்ந்தது.
 
சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும்.

மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.