சனி எந்த ஸ்தானத்தை பார்க்கிறாரோ அந்த ஸ்தானம் சிறிது காலத்திற்குப் பிறகு பலமும், விருத்தியும் அடைகிறது. சனிக்கு 3, 7, 10 ஆகிய பார்வைகள் உள்ளன. அதாவது குரு இருக்கும் இடத்தில் இருந்து 3, 7, 10 ஆகிய இடங்களை பார்வையிடுகிறார். மூன்றாம் பார்வையும், பத்தாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாகும்.
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி்ஸ்ரீசார்வரி வருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்த ரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு - சுக்ல துவாதசியும் - க்ருத்திகை நக்ஷத்ரமும் - அமிர்தயோகமும் - ஸாத்ய நாமயோகமும் - பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு - அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
மகர ராசிக்கு வரும் சனி பகவான் தொடர்ந்து 2 1/2 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். மகர ராசியில் இருந்து தனது மூன்றாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் கடக ராசியையும் - பத்தாம் பார்வையால் துலா ராசியையும் பார்க்கிறார். சனி பகவானுக்கு பார்வை பலத்தை விட ஸ்தான பலமே அதிகம். அதாவது பார்க்கும் இடத்தின் பலத்தினை விட இருக்கும் இடத்தின் பலமே அதிகம்.
பொதுவாக ராசிகள் பெறும் பலன்களின் அளவுகள்:
நன்மை பெறும் ராசிகள்: ரிஷபம் - சிம்மம் - கன்னி - விருச்சிகம்
நன்மை தீமை இரண்டும் கலந்து பலன்கள் பெறும் ராசிகள்: மேஷம் - மீனம்
சனி ஆட்சியாக மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் தடை அகலும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். இடி மின்னல் அதிகம்.
இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம்.
உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.