வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

திருஷ்டி மற்றும் எதிர்மறை சக்திகளை வெளியேற்ற உதவும் பரிகாரங்கள் !!

ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றுக்கு தீய சக்திகளை விரட்டும் ஆற்றல் உண்டு.

விசேஷ வைபவங்கள், சுபநிகழ்வுகளிலும், மணமக்கள் வீட்டினுள் வருதல், தாயும் குழந்தையும் முதல் முறை வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் ஆரத்தி எடுத்து  திலகம் இடுவது சங்க காலம் தொட்டே இருந்து வருகிறது. 
 
உப்புக்குளியல்: வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
 
எலுமிச்சம்பழம்: வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள்  பொடியைத் தடவியும் வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிடவும்.
 
கடல் நீர்:  வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து  கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம்.
 
வாழை மரம்: விசேஷங்களின்போது குலை தள்ளி, பூவுடன் இருக்கும் வாழைமரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
 
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள்  ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.