வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

பித்ரு சாபம் நீக்கும் அமாவாசை வழிபாடு...!

அமாவாசை என்பது சந்திரனின் ஒரு மாத வளர்பிறை, தேய்பிறை சுழற்சி காலத்தில் தேய்பிறை காலத்தில் இறுதியாக வருவது. அன்றைய தினம் இந்த பூமியின் மீது ஒரு விஷேஷமான சக்தி நிறைந்திருக்கும். 
இத்தகைய தினத்தில் விரதம் இருந்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதால் நாம் விரும்பிய அனைத்தையும் நாம் பெறமுடியும். அப்படிபட்ட  சிறப்பான தினத்தில் அமாவாசை விரதம் இருக்கும் முறை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.
 
முதலில் அமாவாசை தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விடவேண்டும். பின்பு வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகள் விலக உப்பு  கலந்த நீரால் வீடு முழுவதையும் கழுவி தூய்மைப்படுத்த வேண்டும். பின்பு வீட்டிலுள்ள பூஜையறையில் காலையிலும், மாலையிலும்  விநாயகர் படத்திற்கு முன்பு தீபம் ஏற்ற வேண்டும்.
 
அமாவாசை தினத்தில் புலால் உணவுகள், பூண்டு, வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகளை தவிர்த்து சாத்விக உணவுகளை உண்ண வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் முழுவதும் பால் பழங்களை உண்ணலாம் அதோடு உங்களுக்கு விருப்பமான கோவிலுக்கு சென்று வழிபட்டு  வரலாம்.
 
மந்திர தீட்சை பெற்றவர்கள் அல்லது தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு தங்களின் விருப்பங்கள் நிறைவேற விரும்புபவர்கள், அமாவாசை நாள் முழுவதும் உணவேதும் உண்ணாமல் விரதம் இருந்து, தங்களின் இஷ்ட தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதால்,  எண்ணிய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருகும். பொன் பொருள்  சேர்க்கை உண்டாகும்.
 
நமது முன்னோர்கள், அமாவாசை தினத்தன்று நம்மை காண வருவார்கள் என்பது ஐதீகம். ஆகையால் அமாவாசை தினத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, படையலிட்டு வழிபடுவது போன்ற செயல்கள் மூலம் பித்ரு சாபம் நீங்கும். அதோடு முன்னோர்களின் பரிபூரண ஆசியும்  நமக்கு கிடைக்கும். அமாவாசை தினத்தில் குலதெய்வத்திற்கு பூஜை செய்து படையலிட்டு வழிபட்டு வந்தால் குலதெய்வ சாபம் நீங்கும்.