வியாழன், 28 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

கோலாகலமாக தொடங்கிய மாங்கனி திருவிழா!

63 நாயன்மார்களில், பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாறை எடுத்துக் கூறும் வகையில், ஆண்டுதோறும் காரைக்காலில் மாங்கனி திருவிழா, நடைபெறுகிறது.  4 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு மாங்கனித் திருவிழா நேற்று மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பல்லக்கில் சிறப்பு  அலங்காரத்தில் பரமதத்த செட்டியார் மேளதாளம் முழங்க இரவு 8 மணியளவில் கோவிலுக்கு அழைத்துவரப்பட்டார். விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை)  காலை 11 மணிக்கு பரமதத்தர் செட்டியாருக்கும், புனிதவதியார் என்கிற காரைக்கால் அம்மையாருக்கும் திருக்கல்யாணம், மாலை பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி  புறப்பாடு, இரவு புனிதவதியாரும் - பரமதத்த செட்டியாரும் தம்பதிகளாக முத்துச்சிவிகையில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சிகள் நடக்கிறது.
 
நாளை (புதன்கிழமை) அதிகாலை 3 மணி முதல் 6 மணிக்குள் பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவருக்கு மகா அபிஷேகமும், காலை 7 மணிக்கு சிவபெருமான்  சிவனடியார் கோலத்தில் பவளக்கால் விமானத்தில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அப்போது, பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவர். அன்று மாலை 6 மணிக்கு அமுது படையல் படைக்கும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து இரவு 11 மணிக்கு அம்மையார் புஷ்ப சிவிகையில் எழுந்தருளி, சித்திவிநாயகர் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 28-ந் தேதி காலை அம்மையாருக்கு இறைவன் காட்சி  தரும் நிகழ்ச்சி நடக்கிறது. மாங்கனித் திருவிழா என்பதால் காரைக்காலில் உள்ள கடைகளில் விற்பனைக்காக மாம் பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.