புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மஹாவதார் பாபாஜியின் கிரியா யோகம் பற்றி தெரிந்துக்கொள்வோம்...!!

இந்தியாவின் மாபெரும் சித்தர்களில் ஒருவரான மஹாவதார் பாபாஜி. கிரியா யோகமானது ‘கிரியாக்கள்’ எனப்படும் பல்வேறு பயிற்சிகளை 5 கிளைகளை உட்கொண்டுள்ளது.

கிரியா ஹத யோகம்: உடலைத் தளர்த்திக் கொள்வதற்கான பயிற்சிகளான ஆசனங்கள், ‘பந்தங்கள்’ எனப்படும் தசைப்பூட்டுக்கள் மற்றும் உள-உடல் குறிகள்/அசைவுகளான முத்திரைகளை உள்ளடக்கியதுதான் கிரியா ஹத யோகம். இவற்றை பயிற்சி செய்வதன் மூலம் மிகுந்த ஆரோக்கியம் மற்றும் மன அமைதியை பெற முடியும். அத்தோடு, உடலில் உள்ள சக்தி மையங்களான சக்கரங்கள் மற்றும் சக்தியின் வழித்தடங்களான நாடிகளை எழுப்பவும் முடியும்.
 
கிரியா குண்டலினி பிராணாயாமம்: இந்த சக்தி வாய்ந்த சுவாசப் பயிற்சியின் மூலம் ஒருவரது அபரிதமான சக்தி மற்றும் மேல்-மன விழிப்புணர்வை எழுப்பி தம் முதுகுத்தண்டின் அடிப்பகுதியினின்று உச்சந்தலை வரையுள்ள ஏழு முக்கியமான சக்கரங்கள் வழியாக பாய்ச்ச முடியும். இது ஒவ்வொரு சக்கரத்துடனும் தொடர்புடைய மறைந்திருக்கும் பேராற்றலை வெளி கொணர்ந்து ஐந்து கோசங்களிலும் மிகுந்த ஆற்றல் வாய்ந்தவராக ஒருவரை மாற்றுகிறது.
 
கிரியா தியான யோகம்: படிப்படியான நிலைகளாக அமைந்துள்ள இத்தொடர் தியானப் பயிற்சி நம் மனதைக் கட்டுக்குள் அடக்கி, நமது ஆழ் மனதை தூய்மை செய்வதற்கான ஒரு விஞ்ஞான பூர்வமான கலையாகும். இதன் மூலம் மனத்தெளிவு, மனதை ஓர் நிலை படுத்தும் திறன், தொலை நோக்கு, அறிவு மற்றும் படைப்பாற்றல் வளர்வதோடு மட்டுமல்லாது மூச்சற்ற நிலையில் இறைவனிடம் ஒன்றிடும் ‘சமாதி’ நிலையில் ஆன்மானுபவமும் பெறவியலும்.
 
கிரியா மந்திர யோகம்: அமைதியாக மனதிற்குள் ஜெபிக்கப்படும் மெல்லிய ஒலிகளின் மூலம் உள்ளுணர்வு, அறிவாற்றல் மற்றும் சக்கரங்களை எழுப்பலாம். ஒரு மந்திரமானது, ‘நான்’ எனும் எண்ணத்தைச் சார்ந்த மனதின் செயல்பாடுகளுக்கு ஒரு மாற்றம் தந்து அபரிதமான சக்தியினைச் சேமிக்க வழி செய்கின்றது. அதே நேரத்தில் ஆழ் மனதின் பழக்கங்கள் தூய்மையும் அடைகின்றது.
 
கிரியா பக்தி யோகம்: நமது ஆன்மாவினுள் இறை தேடலைப் பயிர் செய்தல். பக்தி சார்ந்த செயற்பாடுகள் மற்றும் தொண்டுகளின் மூலம் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆன்மீக பரவசத்தை எழுப்பலாம். பக்தி பாடல்கள், சடங்கு-வழி வழிபாடு, தீர்த்தயாத்திரைகள் மற்றும் இறை வழிபாட்டின் மூலம் அன்பிற்கினிய ஆண்டவனை அனைத்திலும் காண்பதினால் நமது செயல்கள் அனைத்திலும் இனிமை கலக்கிறது.