வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சித்த நிலை மூன்று எவை என்பதை அறிந்து கொள்வோம்...!

சித்த நிலையை `சிவநிலையாகிய முக்தியின்பம்’ என்கின்றன ஞான நூல்கள்.  ‘அருள்திறலால் எளிதாகச் செய்து முடிக்கும் செயல்’ இதுதான் சித்தி  என்பதற்கு சித்தர் பெருமக்கள் சொல்லும் அரும்பொருள். ‘அருள்சேர் அனுபவம்’ என்பது வள்ளலார் வாக்கு. சித்தியை மூவகையாகப் பிரித்துச் சொல்வார்கள்.  அவை: ஞான சித்தி, யோக சித்தி, கரும சித்தி.  
1. ஞான சித்தி: மூவகை சித்திகளில் முதன்மையானது. கலை அறிவு, ஆன்ம விசாரணை, அகமுக பாவனை, பிரமானுபவம் பெறுதல் ஆகியவற்றால் ஞானசித்தி  கைகூடும் என்கின்றன ஞானநூல்கள். இதைப் பெற்றவர்களுக்கு 647 கோடி சித்திகள் ஏவல் செய்யக் காத்திருக்குமாம்.
 
2. யோக சித்தி: யோகநிலைக்கானது இது. மூலாதாரத்தை விழிப்பித்து, ஆறு ஆதாரங்களைக் கடந்து சித்தி அனுபவம் பெறுவது. இப்படியான யோக சித்தி  கைவரப்பெற்றவர்கள் அரிய சாதனைகளைப் புரியும் வல்லமை கொண்டவர்களாகத் திகழ்வார்களாம்.
 
3. கரும சித்தி: மூன்றாவதான கரும வகை சித்திகளைப் பெரியோர்கள் போற்றுவதில்லை. 
 
உலகம் தோன்றிய காலம் முதற்கொண்டே மனித மனம் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் அதிகம். அவ்வாறு அவன் வெளியே தேடிக்கண்டு கொண்டவை இவ்வுலக  வாழ்க்கைக்குப் பயன்பட்டன. உள்ளே தேடிக் கண்டு கொண்டவையே மெய்ஞ்ஞானம். இது, இக-பரம் இரண்டுக்கும் உற்றத் துணையான ஞானம் ஆகும். இப்படி, சித்தமாகிய அறிவின் அற்புதத்தை அறிந்து இயற்கையை வென்றவர்களே சித்தர்கள் எனலாம். இவர்கள் காயசித்தி பெற்ற உடலுடன் இறவா வரமும் பெற்றவர்களாகத் திகழ்ந்தனர். தாங்கள் அறிந்த ரகசியத்தை உபதேசமாக சீடர்களுக்கு போதித்தனர். யோகம், வைத்தியம், மந்திரம், ஜோதிடம், பூஜா விதிகள்  முதலானவற்றையும் சீடர்களுக்குப் பயிற்சியாய் வழங்கினார்கள்.