ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

கோரக்கர் பிறப்பு பற்றிய அறிய தகவல்கள்...!!

ஒரு சமயம் சிவபெருமான் கடற்கரையில் உமாதேவிக்கு தாரக மந்திரத்தை உபதேசித்த பொழுது தேவி சற்று கண்ணயர்ந்தாள். சிவபெருமான் உரைத்துக் கொண்டிருந்த தாரக மந்திரத்தை மீன் குஞ்சு ஒன்று கேட்டு மனித வடிவமாகியது. சிவபெருமான் அதற்கு மச்சேந்திரன் என்று  பெயரிட்டு சிறந்த சித்தராக்கி ஞானத்தைப் பரப்புமாறு அருள்புரிந்தார்.
மச்சேந்திரன் தவம் புரிந்து சிறந்த சித்தரானார். இவர் ஒரு ஊரில் சென்றுகொண்டிருந்த பொழுது இவருக்கு பிச்சையிட்ட பெண் மனக்குறையோடு பிச்சையிட, மச்சேந்திரர் அப்பெண்ணிடம் உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது என வினவினார். அப்பெண் தான் மகப்பேறு இன்றி  வருந்துவதை கூறினாள்.
 
மச்சேந்திரர் சிறிது திருநீற்றை கொடுத்து “இதனை நீ உட்கொள்வாயானால் மகட்பேற்றை அடைவாய்” என்று கூறிவிட்டுச் சென்றார். தான் திருநீறு பெற்ற செய்தியை அவள் அண்டைவீட்டுப் பெண்ணிடம் கூறினாள். அவளோ “உனக்கு விபூதி கொடுத்தவர் போலித் துறவியாய்  இருந்தாலும் இருக்கலாம். எனவே நீ அவ்விபூதியை உட்கொள்ளாதே” என்று சொன்னாள். இதனால் அச்சமடைந்த அப்பெண் தான் பெற்ற திருநீற்றை அடுப்பில் கொட்டினாள். சில ஆண்டுகள் சென்றபின் மச்சேந்திரர் மீண்டும் அவ்வூருக்கு வந்தார். தான் முன்பொரு சமயம் பிள்ளைப்  பேற்றிற்காக திருநீறு அளித்த பெண் வீட்டிற்கு சென்று “அம்மணி, உன்னுடைய மகனை நான் பார்க்க வேண்டும். அவனை அழைப்பாயாக”,  என்று கூறினார்.
 
பக்கத்துவீட்டு பெண் பேச்சைக் கேட்டு அன்புடன் அளித்த விபூதியை உண்ணாமல் அடுப்பில் போட்டுவிட்டு இப்பொழுது மகன் இல்லாமல் வருந்தும் நிலையை கூறி தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள் அப்பெண்.
 
மச்சேந்திரர் சரி அந்த விபூதியை எங்கு கொட்டினாய் என்று கேட்டார். அவளும் அந்த விபூதி இருந்த அடுப்பின் சாம்பலைக் காட்டினாள். மச்சேந்திரர் அடுப்பின் பக்கத்தில் நின்று “கோரக்கா” என்று கூப்பிட்டார்.
 
அடுப்பு சாம்பலில் இருந்து குழந்தை ஒன்று சித்தர் திருநீறு கொடுத்த காலம் முதல் இருக்கவேண்டிய வளர்ச்சியோடு வெளிப்பட்டது. அந்த கோதார அடுப்பின் சாம்பலில் இருந்து வெளிப்பட்டதால் கோரக்கர் என்று பெயரிட்டு சீடனாக ஏற்றுக் கொண்டார்.
 
அண்டசராசரங்களும் ஆதிகுருவாக விளங்கக்கூடிய அருள்குரு காகபுஜண்டரின் எண்ணற்ற சீடர்களுள் ஒருவர் கோரக்கர். இந்த சித்தர் கொல்லிமலையின் அதிபதியாவார். பதினெண்சித்தர்களில் மிகப்பெருமை பெற்றவர் இவர். பல ஆயிரம் ஆண்டுகள் ஆயுள் கொண்ட மிக உயர்ந்த உயிர்மருந்துகளைத் தயாரித்த சித்தர் இவர் மட்டுமே. அட்டமாசித்திகளையும் பூரணமாகப் பெற்றவர் இவர்.